தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்கிறார்கள்???

13 November 2020, 8:18 pm
Quick Share

தீபாவளி என்றாலே பட்டாசு,  பலகாரம் மற்றும் புதுத்துணி தான். கிராமங்களில் ஆட்டுக்கறி விருந்து களைகட்டும். ஆனால் இது எல்லாத்துக்கும் முன்னாடி காலை எழுந்தவுடனே நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க சொல்வார்கள். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். நவம்பர் 14  ஆம் தேதி அன்று வர உள்ள தீபாவளி திருநாள் அன்று விடியற்காலை 4 மணி முதல் 5.30 மணிக்கு உள்ளாக சூரியம் உதயம் ஆவதற்கு முன்பாக தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். 

ஆனால் இவ்வாறு ஏன் குளிக்க வேண்டும் என்று நீங்கள் யோசித்து உள்ளீர்களா…??? அதனை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். “சனி நீரோடு” என்று பெரியவர்கள் கூற கேட்டிருப்பீர்கள். இந்த வருட தீபாவளி சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமை அன்று வருவது சிறப்பான விஷயம். 

பொதுவாக சூரியன் உதிப்பதற்கு முன்பு எண்ணெய் வைத்து குளிக்க கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் தீபாவளி அன்று மட்டும் சூரிய பகவான் உதிப்பதற்கு முன்பாகவே அனைவரும் எண்ணெய் வைத்து தலைக்கு குளித்து விட்டு தனது மகனான நரகாசுரனை வேண்ட வேண்டும் என பூமாதேவி கிருஷ்ண பகவானிடம் வேண்டினாள். 

இதனோடு நல்லெண்ணெயில் மகாலட்சுமியும், தண்ணீரில் கங்காதேவியும் எழுந்தருள வேண்டும் எனவும் வேண்ட அவர் கேட்டது போலவே நடக்கட்டும் என அருள்புரிந்தார் கிருஷ்ண பகவான். இதனால் தான் தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் ஆகிவிட்டதா என்று கேட்பார்கள். 

இது அனைத்தையும் தாண்டி எண்ணெய் குளியல் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. நல்லெண்ணெயில் குளிப்பது உடலில் உள்ள பித்தம் மற்றும் சூட்டை தணிக்கிறது. வரண்ட காணப்படும் தோல் சரியாகும். இரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது மன அழுத்தத்தை போக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஆதலால் வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்து இருந்துள்ளனர். நல்லெண்ணெயில் பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவை சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் குளிக்க வேண்டும். அதிலும் இந்த தீபாவளி எண்ணெய் தயாரிப்பதே ஒரு கலை. அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் வாணலியை முதல் நாள் இரவே ரெடியாக வைத்து விடுவார்கள். 

அதிகாலையில் எழுந்து எண்ணெயை தயார் செய்வார்கள். எண்ணெய் தயார் ஆனதும் அனைவரும் வரிசையாக உட்கார்ந்து எண்ணெயை உடம்பு மற்றும் தலையில் தேய்த்து ஊற வைத்து வெந்நீரில் குளிப்பார்கள். அந்த வெந்நீரில் சந்தனம் மற்றும் மஞ்சள் தூள் சேர்ப்பது ஐதீகம். ஷாம்பூ எதுவும் பயன்படுத்தாமல் சிகைக்காய் போட்டு தான் குளிக்க வேண்டும். 

என்ன நண்பர்களே தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டீர்களா… தீபாவளி அன்று தான் எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும் என்பதில்லை. எண்ணெய் வைத்து குளிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்பதால் வாரம் ஒரு முறையாவது எண்ணெய் குளியல் வைப்பதை ஒரு  பழக்கமாக வைத்து கொள்ளுங்கள். இந்த தீபாவளியை பாதுகாப்பாகவும், சந்தோஷத்துடனும் கொண்டாடி மகிழுங்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

Views: - 42

0

0