சமூக செயற்பாட்டாளர் மீது கொலைவெறி தாக்குதல்: சட்டவிரோத கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொடூரம்…பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..!!

Author: Rajesh
5 May 2022, 11:50 am
Quick Share

ஈரோடு: சென்னிமலையில் சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மீது ஐந்து பேர் கொண்ட கும்பல் இரும்பு ராடால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தென்பகுதியில் எக்கட்டாம் பாளையம் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 30 ஆண்டுகளாக சுமார் 9 கல் குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த அனைத்து கல்குவாரிகளுமே, சட்டத்திற்கு புறம்பாக- பல்வேறு அரசு விதிகளை மீறி இயங்கி வருகிறது. கல் குவாரிகளின் சட்ட விரோத செயல்பாட்டை, அந்த கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் உள்பட பலர் அரசுக்கு தொடர்ந்து பல்வேறு ஆதாரங்களுடன் புகார்களாக கடந்த ஓராண்டாக கொடுத்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக இயங்கிய கல் குவாரிகள் மீது, அதை மூட வைப்பதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பலரும் தொடர்ந்து முயற்சி எடுப்பதும் அவர்கள் பல்வேறு வகையில் சாம, பேத, தான,தண்ட முறையில் மிரட்டப்பட்டும்- அச்சுறுத்தப்படும் தொடர் நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் தடுத்து செயல்பட முடியாமல் வைக்கப்பட்டனர்.

ஆனால் தமிழகத்தின் கனிமவள முறைகேடுகளை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு பணியாற்றும், சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தின் தொடர்புக்கு பின்னால், தமிழ்ச்செல்வன் போன்றோர் சட்டவிரோத கல்குவாரிகள் செயல்பாடுகளை ஆதாரத்தோடு அரசுக்கு தொடர்ந்து புகார் அளிக்க தொடங்கினர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 2’2021 கிராமசபை கூட்டத்தில், எக்கட்டாம் பாளையத்தில் இயங்கும் கல் குவாரிகளுக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் போட வைத்தனர். அதுமட்டுமன்றி தமிழகம் முழுக்க இருக்கக்கூடிய சூழலியல் மற்றும் விவசாய அமைப்புகளின் துணையோடு, எக்கட்டாம் பாளையம் கிராமத்தில் இயங்கும் அனைத்து சட்ட விரோத கல்குவாரிகளையும் நேரில் பார்வையிட வைத்து, களஆய்வு செய்து உண்மைநிலையை வெளிக் கொண்டு வர வைத்தனர்.

இவர்களின் தொடர்ந்த ஆதாரபூர்வமான புகார்களினால், கல்குவாரிகள் முறைகேடுகள் பற்றி ஈரோடு கோட்டாட்சியர் விசாரணை நடந்து இன்னும் முடிவு அறிவிக்கப்படாமல் உள்ளது. எக்ட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள 9 குவாரிகளில், மூன்று குவாரிகள் ஏற்கனவே கடந்த ஆண்டிலேயே அனுமதி முடிந்து விட்டது. ஒரு குவாரி அனுமதி இருந்தும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவாணை இல்லாததால் இயங்க முடியாமல் உள்ளது.

தற்போது இயங்கி கொண்டுள்ள 5 குவாரிகளில், 4 குவாரிக்கு அனுமதி இன்னும் சில மாதங்களில் முடியும் நிலையில் உள்ளது. கல் குவாரிகளின் சட்டவிரோதச் செயல்பாடுகளினால், கடந்த ஆண்டு அனுமதி காலம் முடிந்த எந்த குவாரிக்கும் புதிதாக அனுமதி தர அரசு அதிகாரிகள் மறுத்து விட்டனர். மேலும் இவர்களின் நடவடிக்கையின் காரணமாக, ஒவ்வொரு சட்ட விரோத கல் குவாரியும் பல கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 24 சிறப்பு கிராம சபைக் கூட்டத்திலும், மே 1-2022 கிராம சபைக் கூட்டத்திலும் தமிழ்ச்செல்வன் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த விவசாயிகள் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகள் தொடர்பாக கிராம சபையில் தீர்மானம் கொண்டுவர மனு கொடுத்திருந்தனர். ஆனால் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட கல் குவாரி உரிமையாளர்கள், அவர்களிடம் தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தகராறு செய்தனர்.

அதுமட்டுமன்றி, எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோயில் முன் நடந்த கிராமசபை கூட்டத்திலேயே கல் குவாரி உரிமையாளர்கள், தமிழ்ச்செல்வனை கொலை செய்து விடுவதாக நேரடியாக மிரட்டி அச்சுறுத்தினர். இந்நிலையில் நேற்று மாலை சென்னிமலை பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள, தமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான கம்ப்யூட்டர் சென்டரில் அவர் இருந்தபொழுது, தொடர்ந்து கண்காணித்து அவரை 5 பேர் கொண்ட கும்பல், கடையில் ஆட்கள் இல்லாத நேரமாக சென்று அவரை இரும்பு ராடால் தாக்கி கொல்ல முயற்சித்துள்ளனர்.

அவர் சமயோசிதமாக நடந்து கொண்டதால் உயிர் தப்பிக்க முடிந்துள்ளது. தலையிலும், தோள்பட்டையிலும், கடுமையான இரும்புராடு தாக்குதலில் எலும்பு முறிவுக்கு உள்ளான அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள கடையில் வைத்து 5 பேர் கொண்ட கும்பல் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 775

0

0