மத்திய அரசின் 11வது கட்ட பேச்சுவார்தையும் தோல்வி: திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி என விவசாயிகள் அறிவிப்பு..!!

23 January 2021, 8:37 am
farmers_at_delhi_border_updatenews360
Quick Share

புதுடெல்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய 11ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. எனவே , திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உபி. உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 58 நாட்களாக முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே ஏற்கனவே நடந்த 10 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், மத்திய அரசு – விவசாய சங்கங்கள் இடையிலான 11வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று மதியம் ஒரு மணிக்கு டெல்லி விக்யான் பவனில் தொடங்கியது. இதில். மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், இணையமைச்சர் சோம் பர்காஷ், 41 விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் ஆரம்பத்திலேயே சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

ஆனால், இதற்கு முந்தைய பேச்சுவார்த்தைகளுக்கு மாறாக இந்த முறை கடுமையாகி இருந்தது. இதனால், எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, வேளாண் அமைச்சர் தோமர் அளித்த பேட்டியில், சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று விவசாயிகள் பிடிவாதமாகக் கூறினார்கள். இதனால் 11ம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதுகுறித்து, பாரதிய கிசான் சங்க செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாய்ட் கூறுகையில், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற எங்களின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து கூறிய பின்பும், அமைச்சர்கள் அரசின் தற்காலிக ஒத்திவைப்பு முடிவை மீண்டும் பரிசீலிக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதில் எந்த முடிவும் எட்டப்படாததால், திட்டமிட்டபடி, குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 4

0

0