கிணற்றின் மேல்தளம் உடைந்து விபத்து… 13 பெண்கள் தண்ணீரில் மூழ்கி பலி : திருமண விழாவில் நிகழ்ந்த சோகம்!!

Author: Babu Lakshmanan
17 February 2022, 8:45 am
Quick Share

திருமண விழா ஒன்றின் போது, கிணற்றின் மேல்தளம் உடைந்து விழுந்த விபத்தில் 13 பெண்கள் உள்ளே விழுந்து பலியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா கிராமத்தை நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு பிறகு, வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். விருந்தினர்களில் பெண்கள் சிலர், வீட்டிற்கு பின்னால் இருந்த கிணற்றின் மேல் ஏறி நின்று பேசிக்கொண்டிருந்தனர். மேல்பகுதி இரும்பால் அமைக்கப்பட்டிருந்ததால், அது வலிமையாக இருப்பதாக நினைத்து 20க்கும் மேற்பட்டோர் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், பாரம் தாங்காமல் கிணற்றின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், மேல் தளத்தில் நின்றுகொண்டிருந்த பெண்கள் அனைவரும் ஆழமான கிணற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், உடனடியாக கிணற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பெண்கள், சிறுமிகள் என 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனால், கிணற்றுக்குள் விழுந்ததில் படுகாயமடைந்து 13 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் 13 பெண்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கிணற்றில் விழுந்து 13 பெண்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Views: - 870

0

0