தமிழகத்தில் இருந்து சபரிமலை சென்ற 2 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள்..!!

17 November 2020, 2:10 pm
sabarimalai- updatenews360
Quick Share

திருவனந்தபுரம்: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அருகில் உள்ள முகாமில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல பூஜைக்கான நடை கடந்த 15ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று 2வது நாளாக பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று சபரிமலையில் 1000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல் இன்றும் 1000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை சான்று 48 மணி நேரத்திற்கு செல்லும் என ஏற்கனவே கேரள அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நிலக்கல் பகுதியில் 24 மணி நேரத்திற்கான சான்று தான் செல்லுபடியாகும் என அதிகாரிகள் தெரிவிப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா பாதிசோதனைக்காக நிலக்கலில் முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கொரேனா பரிசோதனைக்காக ரூ.625 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே பக்தர்கள் எடுத்து வந்திருந்த பரிசோதனை செல்லுபடியாகத நிலையில் தற்போது கொரோனா பரிசோதனை நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசோதனை மேற்கொள்கின்றனர். எந்த மாநிலத்தில் இருந்து வந்தாலும் கேரளாவில் கொரோனா பாதிசோதனை செய்வது கட்டாயம் என கேரள அரசு தெரிவித்துள்ளது.