அடேங்கப்பா… 2000 கிலோ கஞ்சா கடத்தல் : இரண்டு வாகனங்களில் வந்த 7 பேர் தப்பியோட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2022, 12:22 pm
2 ton Cannabis - Updatenews360
Quick Share

இரண்டு டன் கஞ்சாவுடன் இரண்டு வாகனங்களில் வந்த 7 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர்.

ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் பெருமளவில் கஞ்சா சாகுபடி நடைபெறுகிறது.

சட்டவிரோதமாக நடத்தப்படும் கஞ்சா சாகுபடியை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட நெடுங்காலமாக செய்து வருகின்றனர்.

அங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பாகங்களுக்கும் கஞ்சா கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை ஒழித்து கட்டுவதற்கு ஆந்திர மாநில அரசு எடுத்த தீவிர முயற்சிகளுக்கு உரிய பலன் இதுவரை கிடைக்கவில்லை.

கஞ்சா பயிர் செய்வது, கடத்துவது ஆகியவற்றை ஒழித்து கட்ட போலீசார் எடுக்கும் முயற்சிகள் தோல்வி அடைவதற்கு ஊழல், லஞ்சம், அரசியல் அழுத்தம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விசாகப்பட்டணம், விஜயநகரம் ஆகிய பகுதியில் இருந்து நடைபெறும் கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள சாலைகளில் சோதனை சாவடிகளை அமைத்து போலீசார் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் சிந்தனப்பள்ளி அருகே வாகன சோதனை நடத்திய போலீசார் கஞ்சா கடத்தி வந்த இரண்டு வாகனங்களை தடுத்து சோதனை செய்தனர். அப்போது அவற்றில் சுமார் இரண்டு டன் எடையுள்ள கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரை பார்த்ததும் அந்த வாகனங்களில் இருந்த ஏழு பேரும் தப்பி ஓடினர். அவர்களில் ஒருவரை மட்டும் கைது செய்த போலீசார் இரண்டு வாகனங்களுடன் சுமார் 2 டன் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் வரைய இருக்கும் என்று கூறப்படுகிறது.

Views: - 414

0

0