இரண்டாவது நாளாக இரண்டு லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்புகள்..! நேற்று ஒரே நாளில் 2,17,353 அதிகரிப்பு..!

16 April 2021, 12:39 pm
Corona_UpdateNews360
Quick Share

இந்தியா நேற்று ஒரு நாளில் 2,17,353 புதிய கொரோனா பாதிப்புகளையும், 1,185 இறப்புகளையும் பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்புகள் நாட்டில் ஒட்டுமொத்தமாக 1,42,91,917 ஆக உயர்ந்துள்ளன. நாடு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும், தொடர்ந்து ஆறாவது நாளாக 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளையும் பதிவு செய்துள்ளது.

தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 15,69,743 ஆக அதிகரித்துள்ள நிலையில் இது மொத்த பாதிப்புகளில் 10.98 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தேசிய கொரோனா மீட்பு விகிதம் 87.80 சதவீதமாகக் குறைந்தது. தொடர்ச்சியாக 37’ஆவது நாளாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஐ.சி.எம்.ஆர் படி, ஏப்ரல் 15 வரை 26,34,76,625 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று ஒரு நாள் மட்டும் 14,73,210 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களைப் பொறுத்தவரையில், மகாராஷ்டிரா நேற்று அதிகபட்சமாக 61,695 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்து நாட்டின் மிக மோசமான மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 36,39,855 ஆக உள்ளது. 
அதே நேரத்தில் 349 புதிய இறப்புகள் இறப்பு எண்ணிக்கையை 59,153 ஆக உயர்த்தின.

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகியவை மொத்த பாதிப்புகளின் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நேற்று டெல்லியில் மட்டும் 16,699 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில், பல மாநிலங்கள் வார இறுதி ஊரடங்கு உத்தரவு, இரவு ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளன. மகாராஷ்டிரா மட்டும் மாநிலம் முழுவதும் ஜனதா ஊரடங்கு என்ற பெயரில் 15 நாட்களுக்கு அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற அனைத்தையும் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 22

0

0