விவசாயிகள் கலவரம் தொடர்பாக 22 எஃப்.ஐ.ஆர்..! டெல்லி மற்றும் ஹரியானாவில் இணைய சேவைகள் தொடர்ந்து முடக்கம்..!

27 January 2021, 10:57 am
Delhi_Police_UpdateNews360
Quick Share

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த வன்முறைகள் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் மொத்தம் 22 எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்துள்ளனர். கிழக்கு எல்லையில் ஐந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நஜாப்கர், ஹரிதாஸ் நகர் மற்றும் உத்தர நகர் ஆகிய இடங்களில் தலா ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை 22 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் அதிகாரி அனில் மிட்டல் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் 100’க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் மீது சவாரி செய்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று பிற்பகல் செங்கோட்டையின் வளாகத்திற்குள் சீக்கிய கொடியையும், விவசாயிகள் சங்கங்களின் கொடிகளையும் கொடிக் கம்பத்தில் பறக்கவிட்டனர். அவர்கள் பல பகுதிகளில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பாதைகளில் இருந்து விலகி, பல பகுதிகளிலும் வன்முறையில் ஈடுபட்டதால், அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். ஐ.டி.ஓ பகுதியில் காவல்துறையினர் நிறுத்தி வைத்திருந்த பேருந்துகளில் போராட்டக்காரர்கள் தங்கள் டிராக்டர்களைக் கொண்டு தாக்கினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாரிகள் டெல்லியின் பல பகுதிகளிலும், தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் (என்.சி.ஆர்) இணைய சேவைகளை நிறுத்தி, வன்முறை வெடித்த பின்னர் மெட்ரோ நிலையங்களை மூடினர். இருப்பினும், இன்று காலை டி.எம்.ஆர்.சி செங்கோட்டை மற்றும் ஜும்மா மசூதி நிலையங்களைத் தவிர மற்ற பகுதிகளில் இணைய சேவைகள் இயல்பாக உள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு அவரது இல்லத்தில் அவசர கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் உள்துறை செயலாளர், உளவுத் துறை அதிகாரிகள் மற்றும் டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எந்தவொரு தேவைகளையும் பூர்த்தி செய்ய டெல்லியில் அதிகமான அளவில் மத்திய துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் எந்தவொரு அசம்பாவித சம்பவத்தையும் கட்டுப்படுத்த காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் தற்போது வெளியான ஒரு தகவலில், டெல்லி-என்.சி.ஆரின் பல பகுதிகள் மற்றும் ஹரியானாவிம் சில பகுதிகளில் மொபைல் இணைய சேவைகள் இன்று மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.