277 செல்போன்கள் : அதிரடியாக பறிமுதல் செய்த ஆந்திர போலீசார்! பொதுமக்களிடம் திருப்பி ஒப்படைப்பு!!

30 November 2020, 5:18 pm
cellphone Seized - Updatenews360
Quick Share

ஆந்திரா : சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திருடர்களிடம் பறிகொடுத்த செல்போன்களில் சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள விலை மதிப்பு வாய்ந்த 277 செல்போன்களை சித்தூர் போலீஸ் சிறப்பு குழுவினர் மீட்டு சாதனை படைத்துள்ளனர்.

பொது மக்கள் வைத்திருக்கும் விலை மதிப்பு வாய்ந்த செல்போன்களை திருடி விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் செயலில் நாடு முழுவதும் பலர் ஈடுபட்டுள்ளனர். செல்போன்கள் திருடப்பட்டது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் கூட பலன் இருக்காது என்று கருதி செல்போன்களை திருடர்களிடம் பறிகொடுத்த பொதுமக்களில் பலர் புகார் அளிக்காமல் இருந்து விடுகின்றனர்.

இந்த நிலையில் சித்தூர் மாவட்ட எஸ்.பி.செந்தில்குமார், உயர்கல்வி பயின்று போலீஸ் வேலையில் சேர்ந்த 20 இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடித்து மீட்பது பற்றிய தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கினார்.

தேவையான பயிற்சிகளை பெற்ற 20 போலீசாரும் ஒரு குழுவாக செயல்பட்டு சித்தூர் மாவட்ட பொது மக்களிடம் இருந்து திருடப்பட்ட சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 277 செல்போன்களை
ஆந்திரா தெலுங்கானா,கேரளா, தமிழ்நாடு,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மீட்டு எடுத்தனர்.

திருடப்பட்ட செல்போன்களை அவற்றின் இஎம்ஐ எண்கள் அடிப்படையில் தற்போது யாரிடம் உள்ளது என்று கண்டுபிடித்த போலீசார், தொலைபேசி மூலம் நீங்கள் பயன்படுத்துவது திருடப்பட்ட செல்போன் என்று கூறி, நீங்கள் அதை யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்று விசாரண நடத்தி, செல்போன்களை வாங்கியவர்கள் தாமாக முன்வந்து செல்போன்களை ஒப்படைக்க செய்தனர்.

இதன் மூலம் முன் எப்போதும் இல்லாத வகையில் சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள 277 செல்போன்களை மீட்ட போலீசாருக்கு எஸ்.பி. செந்தில்குமார் பாராட்டு தெரிவித்தார்.


செல்போன்களை பெருமளவில் திருடி விற்பனை செய்த குற்றத்திற்காக நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். இதுதொடர்பாக செல்போன்களை வாங்கி பயன்படுத்தியவர்கள் மீது வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

Views: - 0

0

0