பிராமணர்களை மட்டும் கொல்கிறதா யோகி அரசு..? ஆம் ஆத்மி எம்பி சர்ச்சைக் கருத்து..! இரண்டு நாளில் மூன்று எஃப்.ஐ.ஆர்..!
16 August 2020, 2:52 pmஆம் ஆத்மி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் மீது கடந்த இரண்டு நாட்களில் உத்தரபிரதேசத்தின் வெவ்வேறு மாவட்டங்களில், மூன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழாவிற்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை அழைக்காததன் மூலம், தாக்கூர் சமுதாயத்திற்காக மட்டுமே செயல்படும் உத்தரபிரதேச அரசாங்கம், தலித்துகளை இழிவுபடுத்திவிட்டது என சஞ்சய் சிங் சர்ச்சைக் கருத்தை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து மூன்று உள்ளூர்வாசிகள் அளித்த புகார்களில் அலிகார், லக்கிம்பூர் கெரி மற்றும் முசாபர்நகர் மாவட்டங்களில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாதி, மற்றும் மதம் அடிப்படையில் பொதுமக்கள் மத்தியில் வெறுப்பை பரப்புவதாக எம்.பி. சஞ்சய் சிங் மீது அளிக்கப்பட்ட புகாரில் தெரிவித்துள்ளது.
சஞ்சய் சிங் மேலும், மாநில அரசுக்கு எதிராக இந்து மதத்தின் பல்வேறு சாதிகளைத் தூண்ட முயற்சித்ததாகவும், இதன் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு அரசியலமைப்பின் கண்ணியத்தையும் மீறியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
புகார்தாரர்களின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 12 அன்று செய்தியாளர் சந்திப்பின் போது, “மக்கள் எஸ்.டி.எஃப்’ஐ “சிறப்பு தாகூர் படை” என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். இது பிராமணர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து கொன்றது” என்று கூறியிருந்தார்.
பிராமணராக இருந்தபோதிலும், சமூகத்திற்கு செய்யப்படும் அநீதிகளுக்கு துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா ஊமையாக பார்வையாளராக இருந்தார் என்றும் சிங் கூறினார்.
சஞ்சய் சிங் ஒரு பேஸ்புக் நேரலையில், யோகி அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பிய பின்னர் தனது தொலைபேசி மற்றும் சமூக ஊடக கணக்குகளில் அச்சுறுத்தல் செய்திகளைப் பெற்று வருவதாகவும் கூறினார்.
“பாஜக தலைவர்கள் உட்பட மக்கள் இதுபோன்ற அச்சுறுத்தும் செய்திகளை அனுப்பி எனது குரலை அடக்க முயற்சிக்கின்றனர்.” என்று அவர் கூறினார்.
இது போல் தனது அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பத் துணிந்த எவரையும் துன்புறுத்துவது யோகி அரசாங்கத்தின் வழக்கமான தந்திரமாகும் என்றார்.
“இந்த மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்த பின்னரும் நான் எனது அறிக்கையை மாற்ற மாட்டேன்.” என்று கூறிய அவர் மேலும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு வேலை செய்ய முடியாது என்றார்.
அவர் மேலும், மாநில அரசு விரும்பினால், தன்னைக் கைது செய்து, தன மீது ஆயிரம் வழக்குகளைக் கூட பதிவு செய்யலாம் எனக் கூறினார்.