ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு குளம்..! புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் சாதித்த உ.பி. அரசு..!

Author: Sekar
9 October 2020, 12:10 pm
River_UpdateNews360
Quick Share

ஒரு கிராமம் ஒரு குளம் திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சி மாவட்டம் கடந்த நான்கு மாதங்களில் 406 குளங்களை புதுப்பித்துள்ளது. இந்த திட்டம் தொற்றுநோய்களின் போது தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிய சுமார் 11,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளது. 

அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, ஜான்சியில் 496 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. மீதமுள்ள 90 குளங்களின் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும் எனக் கூறப்படுகிறது.

ஜான்சி மாவட்ட ஆட்சியர் ஆண்ட்ரா வம்சி, “மீதமுள்ள குளங்களில் நாங்கள் இறுதிப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் பின்னணியில் உள்ள யோசனை, மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் நல்ல நிலையில் ஒரு குளம் இருக்க வேண்டும் என்பதாகும்” என்றார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்) கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கொரோனாவால் தேசிய ஊரடங்கின் போது திரும்பி வந்த 11,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம், ஏராளமான மக்கள் நீர்நிலைகளை புதுப்பிக்க பணியமர்த்தப்பட்டனர்.

“தற்போது வரை, மாவட்டத்தில் சுமார் 1.12 லட்சம் பேர் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் கீழ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு நாளைக்கு ரூ 182 சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஆறு கோடி ரூபாய் செலவிட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

வம்சியின் கூற்றுப்படி, நீர்நிலைகள் புத்துயிர் பெறுவது வறட்சியால் பாதிக்கப்பட்ட பண்டேல்கண்டில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த உதவும். மாவட்டத்தில் ஒரே ஒரு நீர் ஆதாரமாக பெத்வா நதி இருந்த நிலையில், இப்போது மக்களுக்கு இந்த நீர்நிலைகளில் இருந்து நீர்ப்பாசனம் மற்றும் பிற நோக்கங்களுக்காக தண்ணீர் கிடைக்கும், என அவர் மேலும் தெரிவித்தார்.

Views: - 53

0

0