ஜம்மு காஷ்மீரில் ஆகஸ்ட் 16 முதல் படிப்படியாக 4ஜி சேவை..! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..!

11 August 2020, 11:42 am
kashmir_phone_updatenews360
Quick Share

ஜம்மு காஷ்மீரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சோதனை அடிப்படையில் அதிவேக 4 ஜி மொபைல் இணைய சேவைகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 16 முதல் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் தலா ஒரு மாவட்டத்தில் 4 ஜி தடை நீக்கப்படும் என்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.

மே 11’ஆம் தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றத் தவறியதற்காக மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கக் கோரி, அரசு சாரா நிறுவனமான ஃபவுண்டேஷன் ஃபார் மீடியா புரொஃபெஷனல்ஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

அதன் கடைசி விசாரணையில், ஜம்மு-காஷ்மீரில் 4 ஜி மொபைல் இணைய சேவைகளை மீட்டெடுப்பதற்கான சாத்தியத்தை, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் ஜி.சி.முர்மு அளித்த அறிக்கையிகளின் அடிப்படையில் மத்திய அரசு ஆராய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

“4 ஜி’ஐ மீட்டெடுப்பதில் சிரமம் இல்லை என்று முன்னாள் கவர்னர் ஜி.சி.முர்மு கூறியுள்ளார். அதற்கு நீங்கள் ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும்.” என்று நீதிபதி ஆர் சுபாஷ் ரெட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு ஆதரவாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 24’இல் அப்போது லெப்டினன்ட் கவர்னராக இருந்த முர்மு, ஜூலை 24 அன்று 4 ஜி சேவைகளை மீட்டெடுப்பது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும், மொபைல் இணைய வேகம் 2 ஜிக்கு மட்டுப்படுத்தப்பட்டாலும் பாகிஸ்தான் தனது பிரச்சாரத்தைத் தொடரும் என்றும் கூறியிருந்தார்.

முன்னதாக மொபைல் இணைய வேகத்தை 2 ஜிக்கு கட்டுப்படுத்துவதை எதிர்த்து ஏப்ரல் மாதம் தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, மே 11 அன்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை நிறைவேற்றியது.

கொரோனா தொற்றுநோய் குறித்த சமீபத்திய தகவல்கள், வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் பொது மக்கள் அணுக முடியவில்லை என்று கூறி 4 ஜி சேவைகளை மீட்டெடுக்க அரசு சாரா நிறுவனம் முயன்றது.

மெதுவான இணைய வேகம் டெலிமெடிசின் அல்லது ஆன்லைன் ஆலோசனையை சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளது என்று அது சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீரில் தகவல்தொடர்பு முழுவதும் ரத்து செய்யப்பட்டு ஊரடங்கு விதிக்கப்பட்டது. மொபைல் இன்டர்நெட் தடைசெய்யப்பட்டிருந்தாலும் தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

Views: - 6

0

0