பிரேசில் நிதி முறைகேட்டில் தொடர்பு..! இந்தியர்களின் 67 வங்கிக் கணக்குகளை முடக்கியது அமலாக்கத்துறை..!

13 August 2020, 5:13 pm
enforcement_directorate_updatenews360
Quick Share

பிரேசிலின் வேண்டுகோளின் பேரில், இந்தியாவில் உள்ள பல்வேறு இந்திய தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்களின் 67 வங்கிக் கணக்குகளை முடக்கியதாக அமலாக்க இயக்குநரகம் டெல்லி உயர்நீதிமன்றத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர சட்ட ஒப்பந்தத்தின் பேரில், இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. ஆனால் இது சம்பந்தமாக எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை.

ஹாமில்டன் ஹவுஸ்வேர்ஸ் நிறுவனத்தின் சார்பாக வழக்கறிஞர் விஜய் அகர்வால் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, கடந்த மாதம் மற்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கணக்குகளை முடக்கிய விவரத்தை வெளியிட்டுள்ளது.

ஹாமில்டன் ஹவுஸ்வேர்ஸ் பிரைவேட் லிமிடெட் மில்டன் என்ற பெயரில் பிளாஸ்டிக், தெர்மோ ஸ்டீல், தெர்மோவேர், பீங்கான் பொருட்கள் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபடுகிறது. இந்த நிறுவனத்தின் கணக்குகளை ஜூலை 13 அன்று அமலாக்கத்துறை முடக்க உத்தரவிடப்பட்டது. மேலும், தங்கள் அனுமதியின்றி நிறுவனத்தின் கணக்கிலிருந்து எந்தவொரு பணமும் திரும்பப் பெற அனுமதிக்கப்படாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை காரணமாக நிறுவனத்தின் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அன்றாட வணிகத்தைச் செய்ய முடியாமல் உள்ளது என்றும், மற்றவர்களுக்குச் செலுத்த வேண்டிய பணம் குறித்து அகர்வால் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அவர் மேலும், “இது தொடர்பாக ஒரு திட்டமிடப்பட்ட குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பது கூட தெரியாதபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் வங்கிக் கணக்கை முடக்குவதற்கு நம்பத்தகுந்த காரணங்களை நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை வழங்கவில்லை.” எனத் தெரிவித்தார்.

பிரேசிலின் வேண்டுகோளின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பரஸ்பர ஒப்பந்தம் இருப்பதால் இந்தியா செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் அமலாக்கத்துறை கூறியது. பிரேசில் மாகாண ஆளுநருடன் தொடர்புடைய முறைகேடு புகாரில், இந்த 67 கணக்குகளை முடக்க பிரேசில் அதிகாரிகள் இந்தியாவை கோரியிருந்தனர்.

இந்தியா உட்பட 50’க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நிதி மோசடி செய்வதில் பிரேசில் மாகாண ஆளுநர் ஈடுபட்டதாக அமலாக்க இயக்குனரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹாமில்டன் ஹவுஸ்வேர்ஸைத் தவிர, மேலும் 8 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0