உள்ளாடை நீக்கச்சொல்லி மாணவியரிடம் அத்துமீறல்… கல்லூரி நிர்வாகம் செய்த படுபாதகம்… குவியும் புகார்கள்!

14 February 2020, 4:30 pm
Gujarath College updatenews360
Quick Share

கல்லூரி மாணவியர் 68 பேரை உள்ளாடை கழற்றச்சொல்லி, நிர்வாகம் சோதனை நடத்திய விவகாரம், குஜராத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் பூஜ் நகரில் ஸ்ரீ சஹஜானந்த் மகளிர் கல்வி நிறுவனம் (எஸ்.எஸ்.ஜி.ஐ.) செயல்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, மாணவியர் 68 பேரை வரச்சொன்ன நிர்வாகம், அவர்களை உள்ளாடை கழற்றுமாறு கட்டாயப்படுத்தி உள்ளது.

இதற்கு மாணவியர் மறுத்தபோது நிர்வாகம் தரப்பில் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. மாணவியர் மாதவிடாயுடன் வகுப்புகளுக்கு வந்து செல்கின்றனரா என்பதை அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு சோதனை நடந்துள்ளது.

இதனால் அதிர்ந்து போன மாணவியர், இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். மாணவியர் சிலர் கூறுகையில், கல்வி நிறுவனத்தை நாங்கள் மதிக்கிறோம். அதற்காக இத்தகைய சோதனைகளை நடத்த அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  குமுறினர்.

அத்துடன், இச்சம்பவம் குறித்து புகார் அளித்தால் வேறுமாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். கல்வி பாதிக்கப்படும் என்று கல்லூரி முதல்வர் மிரட்டியதாகவும் மாணவியர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து கல்லூரி டீன் தர்ஷனாவிடம் கேட்டபோது, விடுதி மாணவியர் தொடர்பான பிரச்சனை தான் இது; கல்லூரி, பல்கலைக்கழகம் தொடர்பானது அல்ல. மாணவியரின் ஒப்புதலுடன்தான் சோதனை நடந்திருக்கிறது; மாணவியரை யாரும் தொடவில்லை; யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை. எனினும், இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இச்சம்பவம், குஜராத் மாநிலத்தில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. கல்லூரி நிர்வாகத்திற்கு பலதரப்பினரும் கண்டங்களை தெரிவித்துள்ளனர். மாணவியரின் பெற்றோர் தரப்பில் இருந்து கல்லூரி மீது புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

Leave a Reply