எட்டு ராஜ்யசபா உறுப்பினர்கள் சஸ்பெண்ட்..! அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அதிரடி..!

21 September 2020, 10:23 am
parliament_ruckus_updatenews360
Quick Share

நேற்று மாநிலங்களவையில் விவசாய சீர்திருத்த மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்த போது, அவையில் அநாகரீகமாக நடந்து கொண்ட 8 ராஜ்யசபா உறுப்பினர்களை ஒரு வாரத்திற்கு அவைத்தலைவர் வெங்கையா நாயுடு சஸ்பெண்ட் செய்துள்ளார்.

கடந்த 2014’ஆம் ஆண்டில் மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்து, விவசாயிகளின் வருமானத்தை நாட்டின் 75’வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் 2022’ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக்க பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இந்த வரிசையில் அவசர சட்டமாக கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கான சீர்திருத்த மசோதாக்களை தற்போதைய மழைகாலக் கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

மக்களவையில் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாமல் கடந்த வியாழக்கிழமை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்கவலையில் நேற்று பல்வேறு அமளிகளுக்கிடையில் மூன்றில் இரண்டு விவசாய மசோதாக்களை மட்டும் மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்நிலையில் நேற்று மசோதா மீதான விவாதம் நடந்த போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் துணைத்தலைவரின் மைக்கைப் பிடுங்கி, மசோதாக்களை கிழித்து எறிந்து ரகளையில் ஈடுபட்டனர்.

சபையில் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டதால் அவையின் தலைவரும் துணைக்குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்டது. ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்தது.

இந்நிலையில் ரகளையில் ஈடுபட்ட ராஜ்யசபா உறுப்பினர்களான டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜு சதாவ், கே.கே.ரகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஜீர் உசேன் மற்றும் எலமரன் கரீம் ஆகிய எட்டு பேரும் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள ஒரு வாரம் தடை விதித்துவெங்கையா நாயுடு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.