150 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின்..! படகில் கொண்டுவந்த 8 பாகிஸ்தானியர்கள்..! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய குஜராத் போலீஸ்..!

15 April 2021, 1:20 pm
drugs_updatenews360
Quick Share

இன்று அதிகாலை அரபிக் கடலில், இந்தியாவின் குஜராத் கடற்கரையில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினைக் கைப்பற்றியதோடு, படகில் இருந்த 8 பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்துவது தொடர்பாக கிடைத்த ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் ஜாகாவ் துறைமுகத்திற்கு அருகே மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கூட்டுக் குழு படகு ஒன்றைப் பிடித்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானை கடலில் பிரிக்கும் சர்வதேச கடல் எல்லைக் கோட்டுக்கு (ஐ.எம்.பி.எல்) அருகில் இந்த இடம் அமைந்துள்ளது.

பாகிஸ்தான் படகில் போதைப்பொருள் பதுக்கல் குறித்த தகவலை தேவபூமி-துவாரகா மாவட்ட காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு மற்றும் ஏடிஎஸ் மூத்த அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் பகிர்ந்து கொண்டதன் அடிப்படையில் இந்த வேட்டை நடந்துள்ளதாக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏ.டி.எஸ் மற்றும் கடலோர காவல்படையின் கூட்டுக் குழு படகில் இருந்து எட்டு பாகிஸ்தான் ஆட்களைக் கைது செய்து 30 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் 150 கோடி ரூபாய் என்று குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட எட்டு பேரிடமும், இந்த சரக்கு யாருக்காக கொண்டுவரப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Views: - 30

0

0