முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்பக் கோரும் மன்னர் குடும்பம்..! சிக்கலில் ஏஎம்யு..!
18 September 2020, 10:58 amஅலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (ஏஎம்யு) உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு நிலத்தை நன்கொடையாக வழங்கிய மறைந்த ஜாட் மன்னர் மகேந்திர பிரதாப் சிங்கின் வழித்தோன்றல்கள், 90 ஆண்டு குத்தகைக்கு நிலம் வழங்கப்பட்டதாகக் கூறி பல்கலைக்கழகத்திலிருந்து நிலத்தை திரும்பக் கோரியுள்ளன.
குத்தகை கடந்த ஆண்டு காலாவதியான நிலையில், மறைந்த மன்னர் மகேந்திர சிங்கின் பெயரை பல்கலைக்கழகத்திற்கு வைக்கவும் ஏஎம்யு நிர்வாகத்தை அவர்கள் கோரியுள்ளனர்.
எனினும், இந்த விஷயத்தை ஆராய்ந்து அதன் அறிக்கையை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க ஏஎம்யு நிர்வாக சபை ஒரு குழுவை அமைத்துள்ளது.
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும், புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியுமான முகமதிய ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியின் பழைய மாணவர் மகேந்திர பிரதாப் சிங் (1886-1979) 1929’ஆம் ஆண்டில் ஒரு பள்ளியைக் கட்டுவதற்காக 3.04 ஏக்கர் நிலத்தை பல்கலைக்கழகத்திற்கு குத்தகைக்கு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இது ஏஎம்யு என ஆனது.
மறைந்த மன்னரின் பேரன் சரத் பிரதாப் சிங்குக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, குடும்பம் குத்தகை காலாவதியாவது குறித்து 2018’ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு சட்டப்பூர்வ அறிவிப்பை வழங்கியிருந்தது. கல்வியை மேம்படுத்துவதற்காக இரண்டு நிலங்களை மன்னர் மகேந்திர பிரதாப் சிங் ஏஎம்யு’க்கு வழங்கியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் மறைந்த ராஜாவின் உறவினர்கள் ஏஎம்யுவிற்கு மறைந்த ராஜாவின் பெயரை வைத்தால், நிலத்தை நன்கொடையாக வழங்க தயாராக உள்ளனர்.
இதைத் தவிர 1.2 ஹெக்டேர் அளவிலான மற்ற நிலத்தையும், திரும்பப் பெற ராஜாவின் குடும்பம் விரும்புகிறது அல்லது நிலத்தின் தற்போதைய சந்தை விகிதத்தில் அதற்கு எதிராக இழப்பீடு வழங்க வேண்டும்.
இதற்கிடையே ஜாட் சுதந்திர போராட்ட வீரரின் பெயரால் அலிகரில் ஒரு புதிய பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான திட்டத்தை கடந்த ஆண்டு உத்தரபிரதேச மாநில அமைச்சரவை அனுமதித்தது.
ஜாட் மன்னர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு நிலம் கொடுத்தார். ஆனால் அவரது பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது மாநில மக்களின் நீண்ட கால குரலாக இருந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு எட்டப்படும் என உத்தரபிரதேச மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.