காதலுக்கு கடும் எதிர்ப்பு… கடைசியாக சந்திக்கலாம் என கூறிய காதலனை நம்பி போன கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை : ஷாக் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2022, 3:31 pm
Lover Brutual Murder -Updatenews360
Quick Share

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரே ஒரு முறை சந்திக்கலாம் வா என கூறி கல்லூரி மாணவியை கதற கதற கற்பழித்து கொடூர கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் மானாஜிபேட்டையை சேர்ந்தவர் சாய்பிரியா (வயது 19). கல்லூரி மாணவி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீசைலன் (வயது 23). இவர்கள் இரண்டு பேரும் கடந்த 2017ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். தினமும் செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் தங்கள் காதல் பற்றி சாய்பிரியா, தனது பெற்றோர்களிடம் கூறி திருமணத்திற்கு ஒப்புதல் கேட்டார். ஆனால் அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். இதனால் பெற்றோர் பேச்சைக் கேட்டு ஸ்ரீசைலனுடன் பேசுவதை சாய்பிரியா தவிர்த்து வந்தார்.

மேலும் ஸ்ரீசைலனிடம் சாய்பிரியாவின் பெற்றோர் எங்கள் மகளுடன் இனி நீ பேசக்கூடாது என்று கூறி கண்டித்தனர். அவர்களிடம் ஸ்ரீசைலன் நாங்கள் 5 ஆண்டு காலமாக காதலிக்கிறோம். எங்களை சேர்த்து வையுங்கள் என கூறியுள்ளார். ஆனால் சாய்பிரியாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 5ம்தேதி சாய்பிரியாவை சந்தித்த ஸ்ரீசைலன், ‘பெற்றோர் எதிர்ப்பால் 5 ஆண்டு காதலை நிராகரித்துவிட்டாய், ஒரே ஒருமுறை என்னுடன் வெளியே வா. மனம் விட்டு பேசிவிட்டு நிரந்தரமாக பிரிந்துவிடலாம். அதன்பிறகு உன்னை சந்திக்கவே மாட்டேன்’ என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சாய்பிரியா, அவருடன் பைக்கில் சென்றுள்ளார்.

இந்நிலையில் மகள் வெளியே சென்று இரவாகியும் வீடு திரும்பாததால் சாய்பிரியாவின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே மறுநாள் காலை சாய்பிரியாவின் செல்போனில் இருந்து அவரது தந்தைக்கு ஒரு மெசேஜ் வந்தது.

அதில், ‘அப்பா, நான் ஸ்ரீசைலன் காதலித்து வந்தேன். நீங்கள் எதிர்ப்பு தொிவித்ததால் அதனை கைவிட்டேன். ஆனால் தற்போது மற்றொருவரை காதலிக்கிறேன். இதற்கும் நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பீர்கள். எனவே எனது காதலனை திருமணம் செய்ய ஐதராபாத் செல்கிறேன், இனி என்னை தேடவேண்டாம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மயிலார்தேவருபள்ளி போலீசில் சாய்பிரியா பெற்றோர் புகார் செய்தனர். அதில், தங்கள் மகள் கடத்தப்பட்டிருக்கலாம், தங்களுக்கு வந்துள்ள வாட்ஸ் அப் மெசேஜை, தங்கள் மகள் அனுப்பியது போல் இல்லை என்று தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், சாய்பிரியாவின் செல்போன் சிக்னலை கண்காணித்தனர்.மேலும் ஸ்ரீசைலனை சந்தேகத்தின்பேரில் நேற்று முன்தினம் பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் தன்னை கைவிட்ட சாய்பிரியாவை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து கால்வாயில் புதைத்தது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீசைலனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் சைலன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:
சாய்பிரியா, 5 ஆண்டு காதலை பெற்றோருக்காக நிராகரித்துவிட்டார். எனவே அவரை கொலை செய்ய ஸ்ரீசைலன் திட்டமிட்டார்.

அவரிடம் கடைசியாக ஒருமுறை பேசிவிட்டு பிரியலாம் என ஆசை வார்த்தைக்கூறி வரவழைத்துள்ளார். அதை நம்பி வந்த சாய்பிரியாவை பைக்கில் முசாபேட்டா மண்டலம் கந்துரு கிராமம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவரிடம் தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தினார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீசைலன், சாய்பிரியாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அப்போது சாய்பிரியா, இதை போலீசுக்கு தெரிவிப்பதாக கூறினார். இதனால் ஸ்ரீசைலன், சாய்பிரியா அணிந்திருந்த துப்பாட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். அங்குள்ள கால்வாயில் சடலத்தை புதைக்க திட்டமிட்டு தனது உறவினர் சிவா (வயது 22) என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார்.

அவருடன் சேர்ந்து சடலத்தை கால்வாயில் புதைத்துள்ளனர். இந்த கொலையில் தனக்கு தொடர்பு இல்லை என நம்ப வைக்க, சாய்பிரியாவின் செல்போனில் இருந்து அவர் டைப் செய்தது போன்று அவரது தந்தைக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கால்வாயில் புதைத்த சடலத்தை போலீசார் நேற்று தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உதவி செய்த சிவாவையும் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 195

0

0