ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை அவகாசம்

20 July 2021, 11:39 pm
Ration_Cards_Tamilnadu_UpdateNews360
Quick Share

டெல்லி: ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தகவல் தெரிவித்தார்.

தற்போது மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. அதில் மத்திய அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கான பதில்களை அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், இணையமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்து வருகின்றனர். ரேஷன் அட்டை தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சார் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நாட்டில் தற்போது வரை 92.8% ரேசன் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்று அந்த எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மேலதிக தகவல்களையும் அந்த பதிலில் இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். அதன்படி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் தமிழகத்துக்கு 6,317.64 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்துக்கு 3,993.80 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி தமிழகத்திற்கு 1,169.38 கோடி ரூபாயும், கர்நாடகாவுக்கு 1,276.03 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.ஆதார் அட்டையுடன் ஆவணங்களை இணைப்பதற்கான நடவடிக்கையில் ஒரு பகுதியாக, ஆதாரை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கான முயற்சியை அரசாங்கம் தொடங்கியுள்ளது. நீண்ட காலமாக அடையாள ஆவணமாக ரேஷன் கார்டு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிகவும் பழமையான அந்த சான்றை, ஆதார் எண்ணுடன் இணைப்பது மோசடிகளைத் தடுக்கும் என்று அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. ரேஷன் அட்டையுடன், ஆதார் எண்ணை ஆன்லைனிலும் இணைக்கலாம். நேரடியாக அலுவலகத்திற்கு சென்று ஆஃப்லைனிலும் இணைக்கலாம்.

Views: - 50

0

0