போதைப்பொருள் விவகாரம்… ஆர்யன்கானின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்.. நாளை ஜாமீன் மனு மீது விசாரணை..!!

Author: Babu Lakshmanan
13 October 2021, 8:10 pm
aryan khan - updatenews360
Quick Share

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைய தினத்திற்கு மும்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அந்த சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனையில், போதைப் பொருட்களை பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்ட பிரபலங்களும் சிக்கினர்.

இதையடுத்து, ஆர்யன்கானை கைது செய்த போலீசார், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக, ஆர்யன்கான் சார்பில் ஜாமீன் கோரி, மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது தங்களது எல்லைக்குட்பட்டது இல்லை என கூறி அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, போதைப் பொருட்கள் ஏதும் பறிமுதல் செய்யப்படாத நிலையில், ஆர்யன்கான் ஒரு வாரமாக காவலில் இருப்பதாகவும், அவரிடம் 2 முறை போலீசார் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், அவர் இன்னும் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என்று ஆர்யன்கான் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், அவரது ஜாமீன் மனுவை தனி மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆர்யன்கானின் மனுவை தனியாக விசாரிப்பதாகவும், ஆர்யன்கானின் ஜாமீன் மனு குறித்து நாளை பதில் தாக்கல் செய்யவும் போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டார்.

Views: - 167

0

0

Leave a Reply