நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு : காதலி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!!
19 August 2020, 9:10 amடெல்லி : பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையில் மர்மம் நீடித்து வரும் நிலையில், அவரது காதலி ரியா சக்கரவர்த்தி தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தோனி அன் டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜுன் மாதம் மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். இவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், தனது மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காதலி ரியா சக்ரவர்த்தியின் மீது சுஷாந்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதே கோரிக்கையை, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி உள்பட பல்வேறு பிரபலங்கள் முன்வைத்து வருகின்றனர். இதையடுத்து, கடந்த ஆக.,7ம் தேதி அமலாக்கத்துறையினர் முன்பு ரியா சக்கரவர்த்தி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
மேலும், சுஷாந்த் சிங் இறந்த தினத்தன்று போலீசாரும், ஆம்புலன்ஸ் ஊழியர்களும் அவரது உடலை கைப்பற்றும் போது, பெண் ஒருவர், அவரது அறையில் இருந்து ரகசியமாக வெளியேறிய சி.சி.டி.வி. காட்சிகளும தற்போது வெளியாகி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தன் மீது பீகார் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை மும்பை போலீசுக்கு மாற்ற ரியா சக்ரவர்த்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.