இதுக்காகவெல்லாம் தடுப்பூசி சோதனையை நிறுத்த முடியாது..! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

2 December 2020, 10:39 am
Covishield_UpdateNews360
Quick Share

சென்னையில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஒரு பாதகமான நிகழ்வுக்கான ஆரம்ப கண்டுபிடிப்புகளுக்காக சோதனைகளை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), சோதனையின் போது ஏற்பட்ட பாதகமான நிகழ்வு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலால் (டி.சி.ஜி.ஐ) மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கொரோனா தடுப்பூசிக்கும் அவரது உடல்நிலை மோசமடைந்ததற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், சென்னையில் நடந்த தடுப்பூசி பரிசோதனையின் மூன்றாம் கட்டத்தில் தன்னார்வலராக இருந்த 40 வயது நபர், தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிறகு, கடுமையான நரம்பியல் மற்றும் உளவியல் அறிகுறிகளை சந்தித்ததாகக் கூறினார். இதனால் சோதனையை நிறுத்தக் கோருவதோடு, மற்றவர்களுடன் சேர்ந்து எஸ்.ஐ.ஐ மீது வழக்குத் தொடுத்து ரூ 5 கோடி இழப்பீடும் கோரியுள்ளார்.

எனினும், எஸ்ஐஐ, இந்த குற்றச்சாட்டுகள் தவறானது என நிராகரித்துள்ளது. மேலும் ரூ 100 கோடிக்கு மேல் இழப்பீடு கோர உள்ளதாகவும் எஸ்ஐஐ நிறுவனம் கூறியது. புனேவைச் சேர்ந்த இந்த நிறுவனம், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் நோயெதிர்ப்புத் திறன் கொண்டது என்று கூறியுள்ளது.

“தடுப்பூசி நோயெதிர்ப்பு மற்றும் பாதுகாப்பானது என நிரூபிக்கப்படாவிட்டால் வெகுஜன பயன்பாட்டிற்கு வெளியிடப்படாது என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறோம்” என்று அது ஒரு வலைப்பதிவில் கூறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பாதகமான விளைவை புகாரளிப்பது குறித்து உரிய நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்று கூறினார். “இது தொடர்பாக நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், நாங்கள் மேற்கொண்டு கருத்து தெரிவிக்க முடியாது.” என்று அவர் கூறினார். அதே சமயம் இந்த பாதகமான விளைவால், எந்த வகையிலும் தடுப்பூசி சோதனைகள் நிறுத்தப்படாது எனத் தெரிவித்தார்.

மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் அல்லது வேறு ஏதேனும் சுகாதார தலையீடு மூலம் பாதகமான நிகழ்வுகள் நிகழ்கின்றனவா என்பதை அறியவேண்டும் என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா கூறினார். 

தடுப்பூசியைச் சுற்றியுள்ள தவறான தகவல்களை எதிர்கொள்வது மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, ஊடகங்கள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களின் பொறுப்பாகும் என்று பூஷன் மேலும் வலியுறுத்தினார். தடுப்பூசி பாதுகாப்பைச் சுற்றியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிகாட்டுதல் ஆவணத்துடன் மத்திய சுகாதார அமைச்சகம் விரைவில் அறிக்கை வெளியிடும் என்றும் அவர் கூறினார்.

தற்போது, ​​அனைத்து ஆரம்ப சோதனைகளுக்கும் பின்னர் எஸ்ஐஐ தடுப்பூசி சோதனைகள் 3’ஆம் கட்டத்திற்குள் நுழைந்துள்ளன. மேலும் பாரத் பயோடெக்கின் மருத்துவ பரிசோதனைகளும் 3’ஆம் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0