கொரோனா சிகிச்சைக்கு வந்து தீயில் கருகிய 8 பேர்…! பிரதமர் மோடி இரங்கல்

6 August 2020, 10:27 am
Quick Share

அகமதாபாத்: அகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

நவரங்கபுரா என்ற பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் அதிகாலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 8 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலியாகினர்.

மற்ற 40 நோயாளிகள் கடுமையான போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டனர். இந்த விபத்து தீவிர சிகிக்சை பிரிவில் ஏற்பட்டதால் அங்கு சிகிச்சையில் இருந்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துவிட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளில் இறங்கினர். நோயாளிகளின் உறவினர்கள் பதற்றத்துடன் மருத்துவமனை வாயிலில் குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: அகமதாபாத் மருத்துவமனை தீ விபத்து சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இது குறித்து முதலமைச்சர் ரூபானி மற்றும் மேயர் படேலுடன் பேசி நிலைமை பற்றி கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிர்வாகம் தேவையான உதவிகளை வழங்கும் என்று பதிவிட்டுள்ளார்.