பராமரிப்பு பணிகளுக்காக அகமதாபாத் கடல் விமான சேவை நிறுத்தம்…!!
29 November 2020, 2:10 pmகுஜராத்தின் அகமதாபாத்தில் கடல் விமான சேவை துவங்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடையும் முன் பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
குஜராத்தில் முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் நர்மதா மாவட்டம் கேவாடியாவில் உலகின் மிக உயரமான சர்தார் வல்லபபாய் படேலின் 182 அடி உயர சிலை ஒற்றுமையை குறிக்கும் வகையில் நிறுவப்பட்டு உள்ளது.
தடாகத்தில் இருந்து, அகமதாபாத் நகரின் சபர்மதி நதி வரையிலான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் கடல் விமான சேவை கடந்த மாதம் துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையை தொடங்கி வைத்து, விமானத்தில் பயணித்தார். கடல் விமான சேவை துவங்கி ஒரு மாதம் நிறைவடையும் முன் பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்று முதல், மூன்று வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் அறிக்கையில், இந்த சேவைக்கான 19 இருக்கைகள் உடைய விமானத்தை பராமரிக்கும் தளம் அமைக்கும் பணிகள் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. தற்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்பதால், சேவை மூன்று வாரங்களுக்கு நிறுத்தப்பட்டு, விமானம் மாலத்தீவு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த பணிகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதால் நேற்று முன்தினம் முதல் பயணியருக்கு முன்பதிவு நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் கடல் விமான சேவை மீண்டும் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0