டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுகவினர் : பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு!!

By: Udayachandran
26 July 2021, 8:46 am
EPS OPS Delhi- Updatenews360
Quick Share

டெல்லி : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இன்று பிரதமரை சந்தித்து பேசுகிறார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று தனித்தனியாக டெல்லி பயணம் மேற்கொண்டனர்.
இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. மத்தியில் பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இருப்பதால், இங்கு ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து வந்தனர்.

தற்போது, தமிழகத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

அதேபோல், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

இருவரும் ஒரே நாளில் தனித்தனியாக விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள அவரது அறையில் ஒன்றாக சந்தித்து பேசுகிறார்கள்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அரசியல் தொடர்பான சந்திப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, தமிழகத்தின் முக்கிய பிரச்சினையாக இருக்கும் மேகதாது அணை குறித்து பிரதமரிடம் இருவரும் முறையிடுவார்கள் என்று தெரிகிறது. மேலும், தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்தும் அவர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 199

0

0