மேற்குவங்க தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி எத்தனை இடங்களில் போட்டி..? அசாதுதீன் ஒவைசி அதிரடி அறிவிப்பு..!

23 March 2021, 3:19 pm
owaisi_updatenews360
Quick Share

அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி, தனது கட்சி மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க முயற்சிக்கும் என்று கூறி தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார். இருப்பினும், கட்சி எத்தனை இடங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது என்று அவர் கூறவில்லை. 

“மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடும். கட்சி எத்தனை இடங்களுக்கு போட்டியிடும் என்பதைப் பொறுத்தவரை, மார்ச் 27 அன்று சாகர்திகியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முழு அறிவிப்பையும் வெளியிடுவேன்.” என்று ஒவைசி கூறினார்.

முன்னதாக, மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிப்ரவரி 25’ஆம் தேதி ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் பேரணி காவல்துறையினரின் அனுமதி இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் மெட்டாப்ரியஸ் பகுதியில் ஒரு பேரணி மூலம் வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒவைசி தனது பிரச்சாரத்தை அப்போது தொடங்க உள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஏஐஎம்ஐஎம் மாநில செயலாளர் ஜமீர்-உல்-ஹசன் கூறுகையில், “ஒவைசி பங்கேற்கும் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. நாங்கள் 10 நாட்களுக்கு முன்பு அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தோம்.

ஆனால் பிப்ரவரி 24 அன்று அவர்கள் எங்களின் பேரணிக்கு அனுமதி கிடையாது என்று போலீசாரால் எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. திரிணாமுல் கட்சியின் இத்தகைய தந்திரங்களுக்கு நாங்கள் தலைவணங்க மாட்டோம்.” என்றார்.

மறுபுறம், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஜனவரி மாதம் நடந்த கட்சி கூட்டத்தில், ஏஐஎம்ஐஎம் கட்சியை பாஜகவின் பி டீம் என விமர்சித்தார். 

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை எட்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் மார்ச் 27 அன்று தேர்தல் பிரச்சாரத்தை ஒவைசி தொடங்குவதாக அறிவித்த்துள்ளதோடு, அன்றே கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதையும் அறிவிக்க உள்ளார்.

ஒவைசி மேற்குவங்கம் வந்தால் முஸ்லீம் சமுதாய ஓட்டுக்கள் பிரியும் என் திரிணாமுல் கட்சி, காவல்துறை மூலம் அவரின் பேரணிக்குக் கூட தடை விதிப்பதாகக் குற்றம் சாட்டப்படும் நிலையில், ஒவைசியின் இந்த அறிவிப்பு, ஏற்கனவே தலைவர்களின் கட்சித் தாவலால் நொந்து போயுள்ள திரிணாமுல் கட்சிக்கு பேரிடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 18

0

0