நடப்பு நிதியாண்டில் ஏர் இந்தியா நஷ்டம்: ரூ.10,000 கோடி பங்கு விலக்கல் பாதிக்கப்படும் அபாயம்..!!
9 February 2021, 11:11 amபுதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிவடையும் நடப்பு நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் ரூ.10 ஆயிரம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் பங்கு விலக்கல் நடவடிக்கை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் நஷ்டம் ரூ.9,500 கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் 2007ம் ஆண்டு இணைக்கப்பட்ட பிறகு இந்நிறுவனம் சந்திக்கும் மிக அதிகபட்ச நஷ்டம் இதுவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பெரும்பாலான விமான நிறுவனங்கள் நஷ்டத்தை எதிர்கொண் டுள்ளன. மொத்த நஷ்டத்தில் ரூ.8 ஆயிரம் கோடி ரொக்க நஷ்டமாகும். மற்றவை தேய்மான செலவினங்களாகும்.
2018ம் நிதி ஆண்டில் ரூ. 5,300 கோடியாக இருந்த நஷ்டம் 2019ம் நிதி ஆண்டில் ரூ. 8,500 கோடியாக உயர்ந்தது. 2020ம் நிதி ஆண்டில் இது ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நஷ்டத்தை எதிர்கொள்ளவும், அன்றாட செலவினங்களை சமாளிக்கவும் தேசிய சிறுசேமிப்பு நிதியம் மூலம் ரூ.5 ஆயிரம் கோடியும், மூன்று வங்கிகளில் இருந்து ரூ.1,000 கோடியும் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் ரூ.4 ஆயிரம் கோடி என்எஸ்எஸ்எப் மூலம் கிடைத்துள்ளது.
எஞ்சிய ரூ.1,000 கோடி இந்த நிதி ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22-ம் நிதி ஆண்டில் அன்றாட நிர்வாக செலவுகளை சமாளிக்க ரூ.4 ஆயிரம் கோடியைத் திரட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பங்கு விலக்கல் நடவடிக்கை யில் டாடா குழுமம் இதை வாங்குவதற்கான வாய்ப்புகளை அதிக அளவில் கொண்டிருந்தது. பங்கு விலக்கல் நடவடிக்கையானது கொரோனா வைரஸ் பரவல் காரண மாக பல்வேறு முறை தள்ளி போடப்பட்டுள்ளது.
0
0