ஆப்கானிஸ்தான் சமாதானத்திற்கு முழு சப்போர்ட்..! அப்துல்லாவிடம் உறுதியளித்த அஜித் தோவல்..!

Author: Sekar
8 October 2020, 11:36 am
abdullah_abdullah_ajit_doval_updatenews360
Quick Share

தலிபான்களுடனான ஆப்கானிஸ்தானின் தலைமை சமாதான பேச்சுவார்த்தையாளர் அப்துல்லா அப்துல்லா நேற்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவலை சந்தித்து ஆப்கானிஸ்தானில் சமாதான முன்னெடுப்புகளுக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் உறுதிப்படுத்தினார்.

ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்த ஆப்கானிஸ்தானின் தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லா, அஜித் தோவலுடனான சந்திப்பு ஆக்கபூர்வமானது என்றும், ஜனநாயக மற்றும் இறையாண்மை கொண்ட ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“இந்தியாவின் என்எஸ்ஏ அஜித் தோவலுடன் ஒரு ஆக்கபூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டோம். ஆப்கானிஸ்தான் அமைதி செயல்முறை மற்றும் தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். சமாதான முயற்சிகளுக்கு இந்தியாவின் முழு ஆதரவையும், ஆப்கானியர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவொரு சமாதான தீர்வையும் அவர் எனக்கு உறுதியளித்தார். இந்தியாவின் ஆதரவைக் கொண்டிருக்கிறோம்” என்று அப்துல்லா அப்துல்லா வெளியிட்டுள்ள டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

“தனது நாடு ஒரு சுதந்திரமான, ஜனநாயக, இறையாண்மை மற்றும் அமைதியான ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது. அங்கு எந்த பயங்கரவாதிகளும் செயல்பட முடியாது. ஆப்கானிஸ்தானுக்கு அதன் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் அமைதி முயற்சிகளில் அதன் ஆக்கபூர்வமான பங்கிற்காக இந்தியாவுக்கு நான் நன்றி தெரிவித்தேன்.” என தனது டிவீட்டில் மேலும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் அப்துல்லா அப்துல்லா இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

நாட்டில் அமைதியை மீட்டெடுப்பதற்காக ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் தலிபானும் ஒரு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கும் நேரத்தில் அவரது வருகை முக்கியத்துவம் பெறுகிறது. அப்துல்லா அப்துல்லா கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு சென்று ஆப்கானிஸ்தான் சமாதான முன்னெடுப்புகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி மற்றும் பிற பாகிஸ்தான் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் தலிபானுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் செப்டம்பர் 12’ஆம் தேதி கட்டாரின் தலைநகர் தோஹாவில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட பல தசாப்த கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தொடங்கின.

எனினும், ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தையாளர்கள் முதல் முறையாக நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் கூட நாட்டில் வன்முறை குறையவில்லை.

வீடியோ கான்பரன்சிங் மூலம் தோஹாவில் ஆப்கானிய சமாதான பேச்சுவார்த்தைகளின் தொடக்க விழாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டு சமாதான முன்னெடுப்புகள் ஆப்கான் தலைமையிலானதாக இருக்க வேண்டும் என்றும் சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் நலன்களை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

ஆப்கானிஸ்தான் மண்ணை ஒருபோதும் இந்திய விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படுத்தக்கூடாது என்றும் ஆப்கானிஸ்தானில் நீண்டகால அமைதியை நிலைநாட்ட உடனடி போர்நிறுத்தத்தின் அவசியத்தை ஆதரித்ததாகவும் அவர் கூறினார்.

செப்டம்பர் 25 அன்று, ஜெய்சங்கர் முன்னாள் ஆப்கானிஸ்தான் துணைத் தலைவர் அப்துல் ரஷீத் தோஸ்தூமைச் சந்தித்து ஆப்கானிஸ்தான் தலைமையிலான, ஆப்கானிஸ்தானுக்குச் சொந்தமான மற்றும் ஆப்கானிய கட்டுப்பாட்டில் உள்ள சமாதான முன்னெடுப்புகளுக்கு இந்தியா முழுமையாக உறுதியுடன் இருப்பதாகக் கூறியாது குறிப்பிடத்தக்கது.

Views: - 65

0

0