“நாடு முழுவதும் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த மழை” – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!
29 August 2020, 4:46 pmநாட்டில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 25 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழை பொழிவு அதிக அளவில் காணப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து இந்திய வானியை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதில், கடந்த 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 28 சதவிகிதம் கூடுதல் மழை கிடைத்தது. இந்த அளவை அதற்கு பிறகு எந்த ஆண்டும் முறியடிக்கவில்லை.
இந்த சூழலில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 25 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது . மேலும், கடந்த 44 ஆண்டுகளுக்குப்பின் கிடைத்த அதிகபட்ச மழைப்பொழிவு இதுதான் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
பிஹார், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, குஜராத், கோவா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் மழைப்பொழிவு காணப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகள், நீர்த்தேக்கங்களில் கடந்த ஆண்டு இருந்த நிலையைவிட, நீர் கொள்ளளவு அதிகரித்து உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.