அம்பேத்கர் சிலை அடிக்கல் நாட்டு விழா தள்ளி வைப்பு..! எதிர்ப்புகளுக்கு அடிபணிந்தது உத்தவ் அரசு..!

18 September 2020, 7:13 pm
Uddhav_Thackery_UpdateNews360 (2)
Quick Share

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி) மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய மகாராஷ்டிர விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி அரசு, டாக்டர் அம்பேத்கரின் 450 அடி சிலையின் அடிக்கல் நாட்டும் விழாவை ஒத்திவைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களையும் அம்பேத்கரின் குடும்ப உறுப்பினர்களையும் அழைக்காததால் இதில் சர்ச்சை கிளம்பியது.

தாதரில் உள்ள இந்தூ மில்ஸில் இன்று நடைபெறவிருந்த விழாவுக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமை தாங்கவிருந்தார்.

இந்த விழாவுக்கு அழைக்கப்பட்ட பிரமுகர்களில் துணை முதல்வர் அஜித் பவார், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, சுற்றுலா அமைச்சர் ஆதித்யா தாக்கரே மற்றும் தாக்கரே அரசாங்கத்தின் மற்ற அமைச்சரவை அமைச்சர்கள் அடங்குவர்.

டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் இந்த நிகழ்விற்கு எந்த அழைப்பையும் பெறவில்லை. அவரது மற்றொரு பேரன் ஆனந்தராஜுக்கு கடைசி நிமிடத்தில் அழைப்பு வந்தது.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பாரதீய ஜனதா தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த பிரவீன் தரேகர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை.

இந்த திட்டத்தின் கட்டுமான பணிகளின் தரம் குறித்து கடந்த காலங்களில் பல ஆட்சேபனைகளை எழுப்பிய ஆனந்தராஜ் அம்பேத்கர், மாநில அரசு மீது குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து நான் ஆட்சேபனைகளை எழுப்பி வருகிறேன். இதனால் கடைசி நேரத்தில் எனக்கு அழைப்பு வந்தது.” என்று அவர் கூறினார்.

பெருகி வரும் கொரோனா வைரஸ் நோய் உட்பட பல சவால்களை அரசு எதிர்கொண்டுள்ளதால், நிகழ்வின் நேரத்தையும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே பிரகாஷ் மாநில அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். இந்த நிகழ்வில் யார் கலந்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்க அதிகாரம் உள்ளதா என்று அவர் கேள்வியெழுப்பினார்.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தரேகர், மாநில அரசு ஆணவம் கொண்டதாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். “எம்.வி.ஏ திமிர்பிடித்தது போல் தெரிகிறது. மற்றவர்களை அறிந்து கொள்ளவில்லை.” என்று அவர் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து இறங்கி வந்த உத்தவ் அரசு, இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில், முதல்வர் தாக்கரே விரைவில் இந்த நிகழ்வு நடைபெறும் என்றும் அனைத்து தலைவர்களும் அழைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

“பிரச்சினையை அரசியல்மயமாக்க வேண்டிய அவசியமில்லை. அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து சிலையின் வடிவமைப்பைத் திருத்த மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் (எம்.எம்.ஆர்.டி.ஏ) அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இது போன்ற ஒரு முக்கியமான விழாவில் அனைவரின் பங்கேற்பும் அவசியம். மேலும் தேவையானதைச் செய்ய எம்.எம்.ஆர்.டி.ஏவுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.” என்று அவர் கூறினார்.

சிலையின் உயரத்தை 250 அடியிலிருந்து 350 அடியாக உயர்த்தவும், 100 அடி பீடத்துடன் கட்டமைக்க கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இதன் மூலம் கட்டமைப்பின் மொத்த உயரம் வெண்கலத்தால் செய்யப்பட சிலையுடன் 450 அடி உயரத்தில் இருக்கும்.

தாமதமாக செயல்படுத்தப்படுவதாலும் ஆரம்ப திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களாலும் திட்ட செலவும் அதிகரித்துள்ளது. முன்னதாக மதிப்பிடப்பட்ட ரூ 763.05 கோடியுடன் ஒப்பிடும்போது, தற்போது திட்டத்தின் மொத்த செலவு ரூ 1,089.95 கோடியாக உள்ளது.

இந்த திட்டத்திற்கான ஆரம்ப அடிக்கல் நாட்டும் விழா 2015 அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடியால் செய்யப்பட்ட போதிலும், கட்டுமான பணிகள் இன்னும் வேகத்தை எட்டவில்லை.

இந்நிலையில் அந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உத்தவ் அரசு திட்டமிட்டுள்ள நிலையில், 2022 ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 9

0

0