பீகாரின் அடுத்த முதல்வர் நிதீஷ் குமார் தான்..! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமித் ஷா..!

18 October 2020, 10:33 am
Amit_Shah_Nitish_Kumar_UpdateNews360
Quick Share

மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பீகாரின் அடுத்த முதல்வராக நிதீஷ் குமார் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும் அமித் ஷா கூறினார்.

நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களில் வென்றால், முதலமைச்சர் பதவிக்கு பாஜக உரிமை கோருமா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பீகாரின் அடுத்த முதலமைச்சராக நிதீஷ் குமார் இருப்பார். நாங்கள் ஒரு பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளோம், அதற்காக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று கூறினார்.

பீகாரில் நிதீஷ் குமார் தலைமையில் ஒன்று, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்று என பீகார் மக்களுக்கு இரட்டை இயந்திரம் கொண்ட அரசாங்கம் கிடைக்கும் என்று அமித் ஷா மேலும் கூறினார். 

மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையில் செயல்படும் லோக் ஜனசக்தி கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், பீகார் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளது.

இது குறித்துப் பேசிய அமித் ஷா, கட்சிக்கு போதுமான இடங்கள் கிடைத்தாலும், பீகாரின் ஆளும் கூட்டணியில் எந்த மாற்றமும் ஏற்படாது எனத் தெரிவித்தார். மேலும் லோக் ஜனசக்தியின் முடிவிற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.

Leave a Reply