உடலில் பிளாஸ்டர் ஒட்டி மது கடத்தல்:2 பேரை கைது செய்த போலீஸ்

2 September 2020, 7:44 pm
Quick Share

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஆந்திராவுக்கு மதுபாட்டில்களை உடலில் வைத்து பிளாஸ்டர் போட்டு ஒட்டி கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் இருந்து மது பாட்டில்களை வாங்கிய ராஜேஷ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் போலீசார் கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக தங்களது உடலில் மது பாட்டில்களை வைத்து பிளாஸ்டர் போட்டு ஒட்டி கொண்டனர். பின்னர் அதன் மேல் டீசர்ட் அணிந்து பைக்கில் ஆந்திர மாநிலம் கன்னவரத்திற்கு மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதற்காக திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் மேற்கு கோதாவரி மாவட்டம் போலவரம் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ராஜேஷ் மற்றும் சீனிவாஸ் ஆகியோரை பைக்கை துல்லியமாக சோதனை செய்த போது எந்தவித தடயங்களும் கிடைக்கவில்லை. இருப்பினும் அவர்கள் இருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களின் உடல் தோற்றம் வித்தியாசமாக இருப்பதை பார்த்து டீசர்ட் மற்றும் ஆடைகளை கழற்றும் படி தெரிவித்தனர். அப்போது அவர்கள் உடலில் மதுபாட்டில்களை வைத்திருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் மது பாட்டில்கள் விலை மற்ற மாநிலங்களை விட இருமடங்காக உள்ளது. இதனால் வெளி மாநிலங்களிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி ஆந்திராவில் கள்ளத்தனமாக விற்பனை செய்வது அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்காக போலீசாரும் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்.

Views: - 4

0

0