போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கு: ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை காவலில் விசாரிக்க அனுமதி

Author: kavin kumar
3 October 2021, 11:18 pm
Quick Share

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி நேற்று இரவு பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்காரணமாக, நேற்று இரவு கார்டெலியா குருஸஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் பயணிகள் போன்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் அந்தக் கப்பலில் ஏறினர். இதனைத் தொடர்ந்து,கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன்,எம்.டி.எம்.ஏ, ஹஷிஷ், உள்ளிட்ட சில போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 2 பெண்கள் உள்பட 8 பேரை பிடித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். இந்த பார்டியில் பங்கேற்க ஒரு நபருக்கு 60 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து,சொகுசு கப்பலில் போதைப்பொருள் பிடிப்பட்டது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடம் போதைப்பொருள் தடுப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும்,முதற்கட்டமாக அவர்களது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 மணிநேர விசாரணைக்குப் பின் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா ஆகியோரை மும்பை போலீஸ் இன்று கைது செய்தது. இதையடுத்து கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஆர்யன்கான் உள்பட 3 பேரை நாளை வரை காவலில் விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது.

Views: - 267

0

0