உணவில் விஷம் கலப்பா..? அசாம் முதல்வர் கலந்து கொண்ட விழாவில் பிரியாணி சாப்பிட்ட 145 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

4 February 2021, 5:11 pm
Biryani_UpdateNews360
Quick Share

முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்ட அரசாங்க விழாவில் பிரியாணி சாப்பிட்ட 145 பேர் வயிற்றுவலி மற்றும் வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அசாம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் நடந்த இந்த விழாவில் பரிமாறப்பட்ட பிரியாணியில் விஷம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

திபு மருத்துவக் கல்லூரியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, உணவு உட்கொண்டதால் அவரும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் இப்போது அவர் நலமாக உள்ளார்.

மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் கல்வி அமர்வை சோனோவால் திறந்து வைத்தார். அதில் கலந்து கொண்ட சுமார் 8,000 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் 145 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 28 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் குவஹாத்தியில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

117 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

“அதே சமையலறையிலிருந்து எனக்கும் உணவு வந்தது என்பதில் சந்தேகமில்லை. நானும் வயிற்று வலிக்கு ஆளானேன். ஆனால் இப்போது நன்றாக இருக்கிறேன்” என்று சர்மா கூறினார்.

கர்பி அங்லாங் துணை ஆணையர் என்.ஜி.சந்திர த்வாஜா சிங்கா கூறுகையில், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மருத்துவமனையில் இறந்தார். ஆனால் அவரது மரணத்திற்கு உணவில் இருந்த விஷம் தான் காரணமா என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என அவர் மேலும் கூறினார்.

இந்த சம்பவத்தை அடுத்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Views: - 24

0

0