போதிய நிதியில்லை..! அனைத்து மதரஸாக்களையும் இழுத்து மூட பாஜக அரசு முடிவு..!

Author: Sekar
11 October 2020, 11:45 am
madarasa_updatenews360
Quick Share

நிதி பற்றாக்குறையால் அசாம் அரசு நவம்பர் முதல் அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகளையும் மூடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசிய அசாம் சுகாதார மற்றும் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இது தொடர்பாக அரசு விரைவில் முறையான அறிவிப்பை வெளியிடும் எனத் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் அறிக்கைக்கு பதிலளித்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.யு.டி.எஃப்) தலைவர் பத்ருதீன் அஜ்மல், அரசு நடத்தும் மதரஸாக்களை மூட மாநில அரசு முடிவு செய்தால், 2021 சட்டமன்றத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் தனது கட்சி இந்த கல்வி நிலையங்களை மீண்டும் திறக்கும் என்று கூறினார்.

அசாம் அரசு ஒவ்வொரு ஆண்டும் மதரஸாக்களுக்காக சுமார் 3-4 கோடி ரூபாயும், சமஸ்கிருத பள்ளிகளுக்கு சுமார் 1 கோடி ரூபாயும் செலவிடுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு பிப்ரவரியில் மதரஸா மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூடுவதற்கான முடிவை அசாம் முதலில் அறிவித்தது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் மீது கடுமையான தாக்குதலை அப்போது நடத்தியது. அசாமின் ஜாமியத் உலமா-இ-ஹிந்த் சட்ட நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தியது.

கடந்த பிப்ரவரியில், வழக்கமான பாடங்களைக் கற்பிக்கும் உயர் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளாக இவை மாற்றப்படுவதாகவும் சர்மா கூறியிருந்தார். ஏனெனில் மத போதனைகள், அரபு அல்லது இதுபோன்ற பிற மொழிகளை நடத்தும் நிறுவனங்களுக்கு நிதி வழங்குவது அரசாங்கத்தின் வேலை அல்ல என அவர் மேலும் கூறியிருந்தார்.

அசாமில் சுமார் 1,200 மதரஸாக்கள் மற்றும் 200 சமஸ்கிருத கற்றல் மையங்கள் இருப்பதாக சர்மா கூறியிருந்தார்.

மக்கள் தங்கள் சொந்த பணத்தைப் பயன்படுத்தி மதத்தை கற்பித்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும், புனித குரானைக் கற்பிக்க அரசு நிதி பயன்படுத்தப்பட்டால், கீதையையும் பைபிளையும் சேர்த்தே கற்பிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

அரசாங்கம் ஒரு மதச்சார்பற்ற அமைப்பு என்பதால் மத போதனையில் ஈடுபடும் அமைப்புகளுக்கு நிதியளிக்க முடியாது என மேலும் தெரிவித்தார்.

Views: - 45

0

0