காவல்துறை ஆட்தேர்வில் முறைகேடு..! நேபாள எல்லையில் வைத்து முன்னாள் டிஜிபி கைது..!

Author: Sekar
6 October 2020, 8:32 pm
Assam_Ex_DIG_Dutta_Arrested_UpdateNews360
Quick Share

அசாம் காவல்துறை ஆட்சேர்ப்பு முறைகேட்டில் பிரதான குற்றவாளிகளில் ஒருவரான அசாம் காவல்துறை முன்னாள் டி.ஐ.ஜி பிரசாந்த குமார் தத்தா இன்று இந்தியா-நேபாள எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

“சிஐடி அசாம் வழங்கிய லுக் அவுட் சுற்றறிக்கையின் அடிப்படையில் தத்தா கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது, அவர் மேற்கு வங்க போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அசாம் காவல்துறையினர் அவரை சரியான நேரத்தில் காவலில் எடுத்து குவஹாத்திக்கு அழைத்து வருவார்கள்” என்று ஒரு போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

செப்டம்பர் 20’ம் தேதி போலீஸ் ஆட்சேர்ப்பு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததிலிருந்து தத்தா, முன்னாள் பாஜக தலைவர் திபன் தேகாவுடன் தலைமறைவாக இருந்தார். இவர்களைக் கைது செய்ய துப்பு கொடுத்ததற்காக அசாம் காவல்துறை தலா ரூ 1 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 30 இரவு பார்பேட்டா மாவட்டத்தில் பதச்சர்குச்சியில் போலீசில் சரணடைந்த உடனேயே தேகா கைது செய்யப்பட்டார். முறைகேடு வெளியானதை அடுத்து மாநில ஆளும் பாரதிய ஜனதா கட்சி அவரை கட்சியிலிருந்து வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

கேள்வித்தாள் கசிந்த முறைகேடு தொடர்பாக இதுவரை ஒரு சில பெண்கள் உட்பட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 20’ஆம் தேதி எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் விளைவாக ஆட்சேர்ப்பு கேள்வித்தாள் கசிவுக்கான தார்மீக பொறுப்பை சுட்டிக்காட்டி அசாம் மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியத்தின் தலைவர் பிரதீப் குமார் கடந்த மாதம் பதவியில் இருந்து விலகினார்.

முதலமைச்சர் சர்பானந்தா சோனோவாலின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, சிஐடி மற்றும் அசாம் காவல்துறையின் குற்றப்பிரிவு ஆகியவை தேர்வுத் தாள் கசிவு பிரச்சினை குறித்து விசாரித்து வருகின்றன.

விசாரணைக் குழு முன்னாள் டி.ஐ.ஜி தத்தா உட்பட பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. கைது செய்யப்பட்டவர்களில் மாநில நீர்ப்பாசனத் துறையின் பெண் ஊழியர் மற்றும் அசாம் காவல்துறையின் சிறப்பு பணிக்குழுவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

விசாரணையை அசாம் டிஜிபி பாஸ்கர்ஜோதி மகாந்தா தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுகிறார். அசாம் காவல்துறையில் துணை ஆய்வாளர்களின் 597 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மாநிலத்தின் 33 மாவட்டங்களில் உள்ள 154 மையங்களில் 66,000 வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து போராடி வருகிறது. பொலிஸ் ஆட்சேர்ப்பு வினாத்தாள் கசிவு ஊழலில் முதல்வர் அலுவலகம் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டிய பின்னர் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளது.

Views: - 44

0

0