50 ஆண்டுகளுக்கு முந்தைய ஆஸ்திரேலிய காதலியை கண்டுபிடித்த 82 வயது இந்தியன் தாத்தா!

3 April 2021, 10:30 am
Quick Share

ராஜஸ்தானில் பாதுகாவலாக பணிபுரியும் 82 வயது தாத்தா ஒருவர், 50 ஆண்டுகளுக்கு முன் தான் காதலித்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணை கண்டுபிடித்து, காதலுக்கு எல்லை இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.

ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் உள்ள குல்தாராவில், கேட் கீப்பராக பணி புரியும் 82 வயதான முதியவர் ஒருவர் தனது முதல் காதல் கதையை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத திருப்பங்களுடன் இருக்கும் அவரது காதல் கதை, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

1970 ஆம் ஆண்டு, தனது 30 வயதில் இருக்கும் போது, ஒட்டகம் வளர்க்கும் பணி செய்து வந்திருக்கிறார் இந்த காதல் மன்னன். அப்போது, ஆஸ்திரேலியாவில் இருந்து மெரினா என்ற பெண், ஜெய்சால்மருக்கு வந்திருக்கிறார். பாலைவன சஃபாரிக்காக 5 நாட்கள் இந்திய பயணம் வந்த மெரினாவுக்கு, கைடாக இருந்த அவர், தனது முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிட்டார். காதல் மன்னனின் கடைக்கண் பார்வைபட்ட மெரினாவுக்குள்ளும் காதல் ஊற்றாக பொங்கியிருக்கிறது.

5 நாட்களும் ‘அன்னலும் நோக்கினாள் அவனும் நோக்கினான்’ என சென்று கொண்டிருந்த அவர்களின் காதல் கதையில் கடைசி நாளில் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. மெரினா தனது காதலை ‘ஐ லவ் யூ’ என வெளிப்படுத்த, தாத்தாவுக்குள் உணர்ச்சி கொப்பளித்திருக்கிறது. இதனையடுத்து மெரினா ஆஸ்திரேலியா சென்றுவிட, கடிதம் வாயிலாக அவர்களின் காதல் தொடர்ந்திருக்கிறது.

சில வாரங்களுக்கு பின் மெரினா அவரை ஆஸ்திரேலியா அழைத்திருக்கிறார். இவரும் வீட்டிற்கு தெரியாமல் 30 ஆயிரம் கடன் பெற்று, விசா எடுத்து ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். அங்கு 3 மாதங்கள் தங்கியிருந்த இவருக்கு, அந்த நாட்கள் பொன்னான நாட்களாக கடந்திருக்கிறது. மெரினா அவருக்கு ஆங்கிலம் கற்று தந்திருக்கிறார். அவரை ஆஸ்திரேலியாவில் தங்குமாறு மெரினா கூற, குடும்ப சூழல் காரணமாக அவர்கள் காதலுக்கு பிரேக் அப் விழுந்திருக்கிறது. மீண்டும் இந்தியா திரும்பிய அவருக்கு மெரினாவிடமிருந்து கடிதம் ஏதும் வரவில்லை. அவரும் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை.

சில காலத்துக்கு பின் அவர் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்று தற்போது 82 வயதை கடந்தும் விட்டார். அவர் மனைவி சமீபத்தில் இறந்துவிட, பிள்ளைகளுக்கும் திருமணமாகி விட்டது. கேட் கீப்பராக பணிபுரியும் அவருக்கு, மெரினாவிடமிருந்து சில வாரங்களுக்கு முன் கடிதம் வந்திருக்கிறது. தனது முதல் காதலியிடமிருந்து கடிதம் வந்ததும், தனது இளமை காலத்தை மீட்டெடுத்த முதியவர், தனது காதலியுடன் தினமும் பேசி வருகிறார். அவரை சந்திப்பதற்கான நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார். காதல்.. அது தானே எல்லாம்!

Views: - 0

0

0