அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா பெருந்தன்மை பேச்சுக்கள்..

5 August 2020, 3:24 pm
Ramar Temple - Updatenews360
Quick Share

வழக்கமாக அரசியல் நிலைப்பாடுகளில் ஒரு கட்சி ஒரு முடிவு எடுத்தால் எதிர்க்கட்சி அதில் ஏதாவது ஒரு வகையில் குற்றம் காண்பது வழக்கம். ஆனால் அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவினையொட்டி வெளியான பேச்சுக்கள் பெருந்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த விழாவில் முக்கிய அம்சம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் யாருக்கு சொந்தம் என்பதை நிலைநாட்ட ஹஷிம் அன்சாரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். 2016ல் தனது 95 ஆவது வயதில் அவர் இறந்தவுடன் அவரது மகன் இக்பால் அன்சாரி வழக்கை தொடர்ந்து நடத்தினார்.

இப்போது இக்பால் அன்சாரிக்கு இந்த பூமி பூஜையில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நான் இந்த பூமி பூஜையில் பங்கேற்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும். கோர்ட் தீர்ப்புக்கு பிறகு இந்த நிலத்துக்குரிய தகராறு முடிந்துவிட்டது. நான் விழாவில் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் ராமர் பெயர் கொண்ட மேலங்கி ஒன்றியம் ராமசரித மானஸ் என்ற ராம காவியத்தையும் பிரதமருக்கு பரிசளிக்க விரும்புகிறேன். இந்தியாவில் மதத்தின் அடிப்படையான சண்டைகள் இதோடு முடிந்து விட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவரது பேச்சு இந்தியாவை மதத்தின் பெயரால் கூறுபோட்டு சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை வைப்பதோடு மத நல்லிணக்கத்திற்கான ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில் ,
“இந்திய துணைக் கண்டத்திலும் அழிக்கமுடியாத அடையாளத்தை ராமாயணம் ஏற்படுத்தியுள்ளது. பல நூறு ஆண்டுகளாக ராமரின் பாத்திரம் ஒற்றுமையின் உறைவிடமாக இந்தியத் துணைக்கண்டத்தில் விளக்கப்படுகிறது. கடவுள் ராமர் அனைவருக்குமானவர் . அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனால்தான் மரியாதை புருஷோத்தமன் என அவரை அழைக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று நடைபெறும் அடிக்கல் நாட்டு விழா ராமரின் ஆசிர்வாதத்துடனும் அவரது போதனைகள் படியும் தேசிய ஒற்றுமை , சகோதரத்துவம், மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தின் அடையாளமாகும் என நம்புவதாக பிரியங்கா கூறியுள்ளார்.

ராமாயணத்தில் ராமனுக்கு எதிரியாகக் கருதப்பட்ட ராவணன் அயோத்தியிலிருந்து 650 கிலோ மீட்டர் அப்பால் உள்ள கவுதம்புத் நகர் மாவட்டதிற்குட்பட்ட பிஸ்ராக்கில் பிறந்ததாக அப்பகுதியினர் நம்புகின்றனர் .

ராவணன் ஜென்மபூமி என்று அழைக்கப்படும் அங்கு ராவணனுக்கு ஒரு கோவில் உள்ளது. அந்தக் கோவில் பூசாரியாக இருக்கும் ராமதாஸ் “அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதைக் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் லட்டு கொடுப்பேன். ராவணன் இல்லை என்றால் ராமனைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. அதேபோல ராமன் இல்லை என்றால் ராவணனைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது .” என்று கூறினார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பெரும் போராட்டம் நடத்திய பாஜகவின் இவர் மூத்த தலைவர் எல். கே .அத்வானி இந்த நிகழ்ச்சி குறித்து பெருமிதம் அடைந்துள்ளார். “இந்த இலக்கை அடைய இத்தனை காலம் ஆகிவிட்டது” என்பதை தனது பரவச நினைவுகளோடு பகிர்ந்துள்ளார். இராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழா குறித்து பெருந்தன்மையான குணத்துடன் வெளிப்பட்ட பேட்டிகள் ராமரின் வலிமையை கூட்டுவதாக உள்ளது.