ஆர்பிஐ கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்..! சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தது மத்திய அரசு..!

14 September 2020, 7:01 pm
Cooperative_Bank_Updatenews360
Quick Share

மக்களவையில் வங்கி ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவை இன்று மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது கூட்டுறவு வங்கிகளை வங்கித் துறையின் முன்னேற்றங்களுக்கு இணையாக அவர்களின் சிறந்த மேலாண்மை மற்றும் வைப்புத்தொகையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான முறையான ஒழுங்குமுறை மூலம் கொண்டுவர முயற்சி செய்கிறது.

காங்கிரசின் சசி தரூர், திரிணாமுல் காங்கிரஸின் சௌகதா ராய் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவை எதிர்த்தனர். மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு மீறி வருவதாக குற்றம் சாட்டினர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த குற்றச்சாட்டை நிராகரித்தார். மாநில கூட்டுறவு சட்டங்கள் எதிலும் மத்திய அரசு தலையிடவில்லை என்றும், முன்மொழியப்பட்ட சட்டம் இந்த வங்கிகளை மற்ற வங்கிகளுக்கும் பொருந்தக்கூடிய அதே விதிமுறைகளுடன் கொண்டுவர முயல்கிறது என்றும் வலியுறுத்தினார்.

“வங்கி, வங்கியாளர்” முறைகள் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். மேலும் 277 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் நஷ்டத்தை பதிவு செய்துள்ளன. மேலும் தேசிய அளவிலான வங்கிகளைப் போல் அல்லாமல் மாநில அளவில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் அரசியல் தலையீடு காரணமாக அதிக முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில், அவற்றைக் களைய மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதன் மூலம் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளும் ஆர்பிஐ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.