திரிணாமுல் கட்சியில் இணைந்தார் முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா..!

Author: Sekar
13 March 2021, 1:28 pm
Yashwant_Sinha_UpdateNews360
Quick Share

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் பாஜக முன்னாள் தலைவரான யஷ்வந்த் சின்ஹா இன்று திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

திரிணாமுல் கட்சித் தலைவர் டெரெக் ஓ பிரையன் மற்றும் பலர் முன்னிலையில் யஷ்வந்த் சின்ஹா தன்னை திரிணாமுல் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

“நாடு எப்போதும் இல்லாத வகையில் இன்று கடுமையான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கிறது. ஜனநாயகத்தின் பலம் ஜனநாயகத்தின் நிறுவனங்களின் பலத்தில் உள்ளது. நீதித்துறை உட்பட இந்த நிறுவனங்கள் அனைத்தும் இப்போது பலவீனமாகிவிட்டன.” என்று திரிணாமுல் கட்சியின் இணைந்த பிறகு அவர் கூறினார்.

“அடல் ஜியின் காலத்தில் பாஜக ஒருமித்த கருத்தை நம்பியது. ஆனால் இன்றைய அரசாங்கம் நசுக்குவதையும் வெல்வதையும் நம்புகிறது. அகாலி தளம், பிஜு ஜனதா தளம் பாஜகவை விட்டு வெளியேறியது. இன்று பாஜகவுடன் யார் நிற்கிறார்கள்?” என்று அவர் மேலும் கூறினார்.

80 வயதான யஷ்வந்த் சின்ஹா அடல் பிகாரி வாஜ்பாய் அரசாங்கத்தின் கீழ் நிதி அமைச்சராகவும் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். கட்சிக்குள் மோடியின் செல்வாக்கு அதிகளவில் உயர்ந்த நிலையில், யஷ்வந்த் சின்ஹா தொடர்ச்சியாக மோடி அரசை விமர்சித்து வந்தார். பின்னர் கடந்த 2018’ல் பாஜகவை விட்டு வெளியேறி, தனியாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், தற்போது மேற்குவங்க அரசியலில், திரிணாமுல் கட்சியில் இருந்து பலர் பாஜகவுக்கு தாவி வரும் நிலையில், அதற்கு பதிலடி நடவடிக்கையாக, மோடி விமர்சகரான யஷ்வந்த் சின்ஹாவை திரிணாமுல் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2014-19 மோடி ஆட்சியில் யஷ்வந்த் சின்ஹாவின் மகனான ஜெயந்த் சின்ஹா, நிதித்துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறையின் இணை அமைச்சகராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 186

0

0