உச்சநீதிமன்றம் நியமித்த நான்கு பேர் குழுவிலிருந்து விலகல்..! விவசாய சங்கத் தலைவரின் முடிவால் பரபரப்பு..!

14 January 2021, 3:32 pm
SC_panel_member_Mann_UpdateNews360
Quick Share

வேளாண் சட்டங்கள் தொடர்பான போராட்டத்தை முடிவுக்கு கொண்டவர உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழுவில் இருந்து பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த பூபிந்தர் சிங் மான் தன்னை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யான பூபிந்தர் சிங் மான், பாரதிய கிசான் யூனியனின் (பி.கே.யூ) தேசியத் தலைவரும், அகில இந்திய கிசான் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாவார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற அமைப்புகளில் பி.கே.யு அமைப்பும் உள்ளது.

“மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்டங்கள் குறித்து கிசான் தொழிற்சங்கங்களுடன் உரையாடலைத் தொடங்க 4 உறுப்பினர்கள் குழுவில் என்னை நியமித்தமைக்கு உச்சநீதிமன்றத்திற்கு நான் நன்றி கூறுகிறேன்.

ஒரு விவசாயியாகவும், ஒரு யூனியன் தலைவராகவும், நிலவும் உணர்வுகள் மற்றும் அச்சங்களைக் கருத்தில் கொண்டு வேளாண் தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், பஞ்சாப் மற்றும் நாட்டின் விவசாயிகளின் நலன்களில் சமரசம் ஏற்படாதவாறு எனக்கு வழங்கப்பட்ட எந்தவொரு பதவியையும் தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். நான் குழுவிலிருந்து என்னை விலக்கிக் கொள்கிறேன். நான் எப்போதும் எனது பஞ்சாப் மற்றும் விவசாயிகளுடன் நிற்பேன்.” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜனவரி 12’ஆம் தேதி, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து, முட்டுக்கட்டைக்கு தீர்வு காண 4 பேர் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்தது. இந்த குழுவின் உறுப்பினர்களாக பூபிந்தர் சிங் மான், மகாராஷ்டிராவின் ஷெட்கேரி சங்க்தானாவின் தலைவர் அனில் கன்வத்,  தெற்காசியாவுக்கான சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் பிரமோத் குமார் ஜோஷி மற்றும் விவசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி ஆகியோரை நியமித்தது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் ஒரு இணக்கமான தீர்வைக் காண முயற்சிக்கும் பணி இந்த குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், பூபிந்தர் சிங் மான் விவசாயிகளின் தலைவராக ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். அவர் உழவர் நண்பர்கள் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். அகில இந்திய கிசான் ஒருங்கிணைப்புக் குழுவை (ஏ.ஐ.கே.சி.சி) அமைப்பதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்போது டெல்லியின் எல்லைகளில் ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்துடன் தங்கியுள்ளனர். இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை அகற்றுவதற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் தங்களை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தயவில் தள்ளிவிடும் என அச்சம் கொண்டுள்ளனர்.

எனினும், புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு சிறந்த வாய்ப்புகளைத் தரும் என்றும் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உதவும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இரு தரப்பும் தங்கள் நிலையிலிருந்து இறங்கி வராமல் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால், போராட்டம் இன்று 50’வது நாளை எட்டியுள்ளது.

Views: - 8

0

0