பாஜக செய்தித் தொடர்பாளர் கல்லூரிக்குள் மர்ம நபர்களால் சுடப்பட்டார்..! பீகாரில் பரபரப்பு..!
27 January 2021, 2:38 pmஅஸ்ஃபர் ஷம்ஸி
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக உள்ள அஸ்ஃபர் ஷம்ஸி ஜமல்பூர் கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் கல்லூரியில் தனது அறைக்குச் செல்லும்போது சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அடையாளம் தெரியாத இரண்டு அல்லது மூன்று மர்ம நபர்கள் அவரை சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். அவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையே முங்கர் எஸ்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இணைப் பேராசிரியரான அஸ்ஃபர் ஷம்ஸி தனது அறைக்குச் செல்லும்போது 2-3 நபர்களால் சுடப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.
அவரது அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியின் மற்றொரு பேராசிரியருக்கு அஸ்ஃபர் ஷம்ஸியுடன் முன் விரோதம் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பீகாரில் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது பேரில் ஷம்சி ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.