பிபின் ராவத் மறைவு : முப்படைகளின் அடுத்த தளபதி இவரா…? மத்திய அரசு விரைவில் அறிவிப்பு!

Author: Babu Lakshmanan
9 December 2021, 11:46 am
Quick Share

சென்னை : பிபின் ராவத்தின் மறைவால் முப்படைகளின் அடுத்த தலைமை தளபதியை நியமனம் செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர். குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இன்று அங்கு மரியாதை செலுத்தப்பட்டு, சாலை மார்க்கமாக கோவை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து டெல்லிக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. இயக்குவதற்கான தகுதியில்தான் ஹெலிகாப்டர் இருந்ததா..? தொழில்நுட்ப குழுவின் ஒப்புதல் இல்லாமல் அபாயகரமான பனி மூட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் எப்படி இயக்கப்பட்டது? என்பது குறித்து விசாரிக்கப்பட உள்ளது. மேலும், விபத்திற்கான காரணம் குறித்து அறிய கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ராணுவம், கடற்படை, விமானப்படைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட முப்படைகளின் முதல் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 2020ம் ஆண்டு ஜன.,20ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, அவரும் தனது பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

பிபின் ராவத் மறைவால் நாட்டின் புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமனம் குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. மேலும், விரைவில் புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமிக்கப்பட உள்ளார். எனவே, தற்போதைய ராணுவ தளபதியான நரவானே அடுத்த முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Views: - 280

0

0