பீகார் சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர ஃபட்னாவிஸ்..! பாஜக அதிரடி அறிவிப்பு..!

30 September 2020, 5:00 pm
devendra_fadnavis_updatenews360
Quick Share

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸை பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளராக பாரதீய ஜனதா நியமித்துள்ளதாக கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10’ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு உட்பட 243 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபையில் மூன்று கட்ட தேர்தல்கள் குறித்து விவாதிக்க கட்சித் தலைவர் ஜே பி நட்டா பீகார் மாநில பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தேவேந்திர ஃபட்னாவிஸைபீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளராக நியமிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூத்த தலைவர்களை மாநிலத் தேர்தல்களுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கும் நடைமுறை பாஜகவுக்கு உள்ளது. 
கடந்த சில வாரங்களாக, பீகார் தேர்தல் தொடர்பாக உள் கட்சிக் கூட்டங்களில் ஃபட்னாவிஸ் கலந்து கொண்டிருந்தார். மேலும் சில முறை மாநிலத்திற்கு நேரடியாகச் சென்றும் பீகார் தலைவர்களுடன் விவாதித்து திரும்பினார். இதன் மூலம் அப்போதே பீகார் தேர்தலில்  ஃபட்னாவிஸுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அதை உறுதி செய்துள்ளது.

இதற்கிடையே தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் லோக் ஜனசக்தியின் தலைவரும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகனுமான சிராக் பஸ்வான் கடும் அதிருப்தி கொண்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதை சமாளித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை தேர்தலில் வெற்றிபெறக் செய்யும் மிகப்பெரும் பொறுப்பில் ஃபட்னாவிஸ் சாதித்துக் காட்டுவார் என பீகார் பாஜகவினர் உறுதிப்படத் தெரிவித்துள்ளனர்.