“சச்சின் சேவாக் சூப்பர்ஹிட் ஜோடியைப் போல்..”..! பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் உரை..!

21 October 2020, 5:21 pm
Rajnath_Singh_UpdateNews360
Quick Share

பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளின் கூட்டணியும் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் தொடக்க ஜோடியைப் போலவே சூப்பர்ஹிட் என்பதால், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கு வாக்களிக்குமாறு பீகாரில் உள்ள வாக்காளர்களிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2020’க்கு முன்னதாக ஒரு பேரணியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை பாராட்டியதோடு, “தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தால் மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒருவர் விவாதிக்க முடியும். ஆனால் நிதிஷ் ஆட்சியில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகளை யாராலும் வைக்க முடியாது.” எனத் தெரிவித்தார்.

பாகல்பூரில் நடந்த பேரணியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் மற்றும் சேவாக் ஆகியோரின் தொடக்க ஜோடியைப் போலவே சூப்பர்ஹிட் ஆகும்” என்றார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) செல்வாக்கு மிக்க பகுதியில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத்  சிங், 15 ஆண்டுகளாக மாநிலத்தை ஆண்ட கட்சி எந்த வகையான வளர்ச்சியை மேற்கொண்டது என்பதை பீகார் மக்கள் பார்த்துள்ளனர் என்று கூறினார்.

“ஆர்ஜேடியின் 15 ஆண்டு ஆட்சியை மக்கள் கண்டிருக்கிறார்கள். மேலும் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசாங்கத்தின் போது பீகாரின் வளர்ச்சியையும் அவர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு அரசாங்கங்களின் செயல்திறனை ஒப்பிட முடியாது. என்டிஏ அரசாங்கத்தின் கீழ் மாநிலம் முழுமையாக மாற்றம் பெற்றுள்ளது” என ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.

பீகார் பாஜக தலைவரும், துணை முதலமைச்சருமான சுஷில் குமார் மோடி மற்றும் நிதீஷ் குமார் ஆகியோரைப் பாராட்டியபோது, இரு தலைவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை யாரும் முன்வைக்க முடியாது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

பீகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டசபைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் பீகார் தேர்தல் முடிவுகள் நவம்பர் 10’ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 20

0

0