தொடர் தோல்வியால் வடக்கு-தெற்கு பிரிவினைவாத அரசியலைக் கையிலெடுத்த ராகுல் காந்தி..! பாஜக கண்டனம்..!

24 February 2021, 11:16 am
Rahul_Gandhi_UpdateNews360
Quick Share

கேரளாவில் தனது சொந்தத் தொகுதியான வயநாடில், சர்ச்சைக்குரிய பிரித்தாளும் நார்த் வெர்சஸ் சவுத் அரசியலைக் கையிலெடுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ராகுல் காந்தியை ஒரு சந்தர்ப்பவாதி என்று குற்றம் சாட்டிய அவர்கள் கேரளாவில் ஆற்றிய உரையின் போது வட இந்தியர்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டினர்.

“முதல் 15 ஆண்டுகளாக, நான் வடக்கில் ஒரு எம்.பி.யாக இருந்தேன், நான் வேறு வகையான அரசியலுடன் பழகிவிட்டேன். என்னைப் பொறுத்தவரை, கேரளாவுக்கு வருவது மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது. திடீரென்று மக்கள் பிரச்சினைகளில் ஆர்வம் காட்டுகிறார்கள், மேலோட்டமாக மட்டுமல்லாது ஆழமாக விவாதிக்கிறார்கள்.” என நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

இந்த கருத்துக்களை வட இந்திய எதிர்ப்பு என்று முத்திரை குத்திய பாஜக தலைவர்கள் ராகுலைத் தாக்கி, அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் உத்தரபிரதேசத்தில் அமேதியிலிருந்து பல தேர்தல்களில் வெற்றி பெற்ற போதிலும், ஒரு தேர்தலில் தோற்றதற்காக இவ்வாறு பேசுவது அவரின் சந்தர்ப்பவாதத்தைக் காட்டுகிறது என்று குற்றம் சாட்டினார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள ட்வீட்டில், “சில நாட்களுக்கு முன்பு அவர் (ராகுல் காந்தி) வடகிழக்கில் இருந்தார். இந்தியாவின் மேற்கு பகுதிக்கு எதிராக விஷத்தைத் தூண்டினார். இன்று தெற்கில் அவர் வடக்கிற்கு எதிராக விஷத்தைத் தூண்டுகிறார். பிரித்தாளும் அரசியல் உதவாது ராகுல் காந்தி ஜி! மக்கள் இந்த அரசியலை நிராகரித்தனர். இன்று குஜராத்தில் என்ன நடந்தது என்று பாருங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமேதி எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி அவரை நன்றியற்றவர் என்று அழைத்தார். தன்னைப்பற்றிய கூற்றான அதிக அறிவு இல்லாதவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அவர் பேசுவதாக ஸ்மிருதி இரானி கூறினார்.

முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலின் போது இரானி தனது குடும்பக் கோட்டையான அமேதியில் ராகுலை தோற்கடித்தார். 2004 முதல் மக்களவையில் உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ராகுல், 2019 பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி பயத்தால் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் சேர்த்தே போட்டியிட்டார். அவர் அமேதியை பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் இழந்த போதிலும், கேரளாவில் உள்ள காங்கிரஸ் கோட்டையிலிருந்து வென்றார்.

இதற்கிடையே மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், “நான் தெற்கிலிருந்து வந்தவன், நான் ஒரு மேற்கு மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி., நான் பிறந்து, படித்து, பணிபுரிந்தது எல்லாம் வடக்கில் தான். நான் உலகம் முழுவதும் இந்தியா முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தினேன். ஒரு பகுதியை எப்போதும் கீழிறக்காதீர்கள். எங்களை ஒருபோதும் பிரிக்க வேண்டாம்.” எனக் கூறினார்.

மற்றொரு பாஜக தலைவர் கிரேன் ரிஜிஜு தனது ட்வீட்டில் ராகுலை “அமேதி மற்றும் வட இந்தியர்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார். “அமேதி மக்கள் உங்கள் முழு குடும்பத்திற்கும் இவ்வளவு வாய்ப்பை வழங்கியுள்ளனர்! நீங்கள் நல்லவர்களாக இருந்தால் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலுள் மக்களும் நல்லவர்கள் தான்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “அவரது மலிவான அரசியலைப் பாருங்கள். தனது மக்களவை ஆசனத்தை காப்பாற்ற கேரளாவுக்கு ஓடிய நபர், வட இந்தியர்களின் அறிவை கேள்விக்குள்ளாக்குகிறார், தலைமுறைகளாக தனது குடும்பத்திற்கு உண்மையாக வாக்களித்தவர்கள் உட்பட! உண்மை என்னவென்றால், செயல்திறன் மற்றும் வளர்ச்சி இல்லாததால் அவர் இவ்வாறு பேச கட்டாயப்படுத்தப்பட்டார்.” எனக் கூறினார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி மலிவான அரசியலைக் கடைப்பிடிக்கிறார் என்றும் பிராந்தியவாதத்தை நாடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

“ராகுல்ஜி, அடல்ஜி ஒருமுறை இந்தியா ஒரு நிலம் மட்டுமல்ல, உயிருள்ள ‘ராஷ்டிரபுருஷ்’ என்று கூறியிருந்தார். தயவுசெய்து உங்கள் மலிவான அரசியலுக்காக பிராந்தியவாதத்தின் வாளால் அதைப் பிரிக்க முயற்சிக்காதீர்கள். இந்தியா ஒன்று, ஒன்று, மற்றும் எப்போதும் ஒன்றாக இருக்கும்.” என்று அவர் கூறினார்.

நாட்டில் “வடக்கு-தெற்கு” பிளவுகளை உருவாக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானும் குற்றம் சாட்டினார்.

“ராகுல் காந்தி எங்கு இறங்கினாலும், காங்கிரஸ் மோசமாகி வருகிறது. ராகுல்ஜி முன்பு வட இந்தியாவை காங்கிரஸிலிருந்து விடுவித்திருந்தார், இப்போது அவர் தெற்கு நோக்கிச் சென்றுவிட்டார். எங்களுக்கும் மக்களுக்கும், முழு நாடும் ஒன்றாகும். காங்கிரஸ் நாட்டை வடக்கு மற்றும் தெற்காக பிரிக்க விரும்புகிறது இந்த முயற்சிகள் வெற்றிபெற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், “வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மேற்கு என நீங்கள் எங்கு சென்றாலும் ராகுல் காந்தி, நீங்கள் எப்போதும் இந்தியர்களை மேலோட்டமாகக் காண்பீர்கள். ஏனென்றால், எங்களைப் புரிந்து கொள்ள, நீங்கள் முதலில் இந்தியராக இருக்க வேண்டும்!” எனக் கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தொடர் குற்றச்சாட்டுக்களால் எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என கேரள காங்கிரசார் நம்பிக்கையாக உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்த பிரிவினைவாத பேச்சால், உள்ளதும் போய்விடுமோ என கேரள காங்கிரஸ் அச்சம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 6

0

0