உத்தரகண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு…!

4 July 2021, 9:11 pm
Quick Share

உத்தரகண்ட் மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக, புஷ்கர் சிங் தாமி பதவி ஏற்றார்.

உத்தரகண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பா.ஜ.க.,வைச் சேர்ந்த திரத் சிங் ராவத், நேற்று முன்தினம் தனது பதவியை, ராஜினாமா செய்தார். இந்நிலையில் நேற்று, டேராடூனில், புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக, பா.ஜ.க. – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க., சட்டப்பேரவைக் குழுத் தலைவராக, கட்டிமா தொகுதி எம்.எல்.ஏ., புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் பேபி ராணி மயுராவை சந்தித்து, பா.ஜ.க., சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை, புஷ்கர் சிங் தாமி வழங்கினார். மேலும், ஆட்சி அமைக்கவும் உரிமைக் கோரினார்.இந்நிலையில் இன்று, உத்தரகண்ட் மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக, புஷ்கர் சிங் தாமி பதவி ஏற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் பேபி ராணி மயுரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க.,வைச் சேர்ந்த பிஷான் சிங் சுப்ஹல், சுபோத் உனியல், அரவிந்த் பாண்டே, கணேஷ் ஜோஷி உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.

இதன் பின்னர், செய்தியாளர்களிடம் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பேசியதாவது:- இளைஞர்களுடன் அதிகமாகப் பணியாற்றி உள்ளேன். அவர்களின் தேவை என்ன என்பது எனக்கு நன்றாகவேத் தெரியும். கொரோனா ஊரடங்கால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தேவைகளை எனது தலைமையிலான அரசு பூர்த்தி செய்யும். மாநிலத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் இளைஞர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 161

0

0