விஸ்வரூபமெடுத்த பாஜக..! பின்வாங்கிய பிரஷாந்த் கிஷோர்..! மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சியின் தோல்வி உறுதி..?

8 March 2021, 10:51 am
Mamata_Prashant_UpdateNews360
Quick Share

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜகவின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், திரிணாமுல் காங்கிரஸ் திக்கு முக்காடி வருகிறது.

கடந்த 2015’ஆம் ஆண்டில் யாரென்றே தெரியாத திலீப் கோஷ் பாஜகவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, அவரது திறமையான செயல்பாடுகளால் இன்று மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் கட்சிக்கு சரி நிகர் சமமாக உருவெடுத்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பல இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்த மக்கள் நலக் கூட்டணியைப் போல், மேற்கு வங்கத்தில் தற்போது இடதுசாரிகள், காங்கிரஸ், இந்திய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளின் கூட்டணி உருவாகியுள்ளது.

கள நிலவரம் இவ்வாறு இருக்க, 8 கட்டங்களாக நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு மார்ச் 27’ஆம் தேதி நடக்கிறது. இதற்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

கலக்கத்தில் திரிணாமுல் கட்சி

30 ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக இருந்த மேற்குவங்கத்தை திரிணாமுல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி போராடி, கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் தோற்கடித்தார். இதன் பின்னர் சரசரவென மம்தா பானர்ஜியின் ஆதிக்கம் மேற்குவங்கத்தில் அதிகரித்த நிலையில், கம்யூனிஸ்ட்களின் நிலை அதலபாதாளத்தில் வீழ்ந்தது.

இதனால் எதிர்க்க ஆளே இல்லாமல் இருந்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சிக்கு, கடிவாளம் போடும் வகையில் பாஜகவின் எழுச்சி அமைந்துவிட்டது. திலீப் கோஷ் தலைமையில் பாஜக வெகுவேகமாக கம்யூனிஸ்ட்களின் இடத்தை எடுத்துக் கொண்டதோடு, கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில், திரிணாமுல் கட்சிக்கு நிகராக எழுச்சி பெற்றனர்.

இந்நிலையில், தற்போது திரிணாமுல் தலைவர்கள் வரிசையாக பாஜக பக்கம் தாவி வருகின்றனர். இதனால் மீண்டும் ஆட்சி அமைப்பது சிக்கல் என்பதால் மம்தா பானர்ஜி கலக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.

உற்சாகத்தில் பாஜக

மேலே சொன்னபடி, திரிணாமுல் கட்சித் தலைவர்கள் வரிசையாக பாஜக பக்கம் தாவி வருவது பாஜகவின் வலிமையை அதிகரித்துள்ளது. குறிப்பாக மேற்குவங்கத்தில் தென் மாவட்டங்களில் கோலோச்சுபவரும், மம்தாவின் வலதுகரமாக விளங்கியவருமான சுவேந்து அதிகாரி பாஜக பக்கம் தாவியது பாஜகவிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சுவேந்து அதிகாரி பாஜக தாவிய பின், திரிணாமுல் கட்சியிலிருந்து பாஜாகாவிற்கு தாவுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் திரிணாமுல் கட்சியே கூண்டோடு பாஜகவில் ஐக்கியமானது போன்ற ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.

சுவேந்து அதிகாரியின் இழப்பை ஈடுகட்ட, சுவேந்துவின் கோட்டையான நந்திகிராம் தொகுதியில் இந்த முறை மம்தா போட்டியிடுவதாக அறிவித்தாலும் எதுவும் சுவேந்து முன் செல்லுபடியாகாது என கூறப்படுகிறது.
இதனால் பாஜக எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என அதிக உற்சாகத்தில் உள்ளது.

வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கம்யூனிஸ்ட் கூட்டணி

ஒரு பக்கம் ஆட்சியை பிடிக்க பாஜகவும், ஆட்சியை தக்கவைக்க திரிணாமுல் கட்சியும் போராடிக் கொண்டிருக்கையில், மற்றொரு பக்கம் கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் மாற்று  இந்திய ஜனநாயக முன்னணி எனும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு ஆகியவை ஒன்றிணைத்து ஒரு புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன. 

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி பல இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறியதைப் போல், மேற்குவங்கத்தில் உருவாகியுள்ள இந்த கூட்டணி, திரிணாமுல் கட்சியின் வாக்கு வங்கியில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர் சவால்

தமிழகத்தில் திமுகவின் தேர்தல் ஆலோசகராக பணியாற்றுவதைப் போல், மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சியின் தேர்தல் ஆலோசகராகவும் பிரஷாந்த் கிஷோர் பணியாற்றுகிறார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாஜக படுதோல்வியை சந்திக்கும் எனவும், பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்றால், தேர்தல் ஆலோசகர் பணியையே விட்டுவிடுவதாகவும், கூறி சவால் விடுத்திருந்தார்.

ஆனால் திரிணாமுல் கட்சி மீதான அதிருப்தி அலை மற்றும் பாஜக எழுச்சி போன்ற காரணங்களால் தற்போது மேற்குவங்கத்தில் நிலைமை பாஜகவுக்கு சாதகமாக மாறியுள்ளது.

இந்நிலையில், இதை நன்கு உணர்ந்துவிட்ட பிரஷாந்த் கிஷோர், தனது சவாலில் இருந்து ஜகா வாங்கி, பாஜக மூன்று இலக்கத்தில் இடங்களை வென்றால், தேர்தல் ஆலோசகர் பணியையே விட்டுவிடுவதாக புதிய சவால் விடுத்துள்ளார்.

முன்பு, பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சியை அகற்றுவேன் என சவால் விட்டு, பின்பு அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் இருந்ததைப் போல் இல்லாமல், இந்த முறையாவது பிரஷாந்த் கிஷோர் சொன்னபடி செய்ய வேண்டும் என பாஜகவினர் இதற்கு பதில் கூறி வருகின்றனர்.  

Views: - 49

0

0