#DeathofDemocracy : கங்கனா ரனவத்தின் அலுவலகம் இடிப்பு..! மும்பை மாநகராட்சி அதிரடி..!

9 September 2020, 1:35 pm
BMC_Demolissh_Kangana_Office_UpdateNews360
Quick Share

பாலிவுட் நடிகை கங்கனா ரனவத்தின் மும்பை அலுவலகத்தில் சட்டவிரோத மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறி சிவசேனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மும்பை மாநகராட்சி (பிஎம்சி) இன்று காலையில் இடிக்கத் தொடங்கியது. 33 வயதான கங்கனா இன்று பிற்பகல் இமாச்சல பிரதேசத்திலிருந்து மும்பைக்கு வர உள்ளார்.

இதற்கிடையில், கங்கனா ரனவத்தின் வழக்கறிஞர், நடிகையின் அலுவலகத்தை இடித்த பி.எம்.சி நடவடிக்கைக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை இன்று மதியம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறையினருடன், பி.எம்.சி எச்-வெஸ்ட் வார்டு அதிகாரிகளின் குழு ஜே.சி.பி.க்கள், புல்டோசர்கள் மற்றும் பிற கனரக உபகரணங்களுடன் அலுவலகத்தை அடைந்து, காலை 11 மணிக்குப் பிறகு இடிக்கும் பணியைத் தொடங்கியது.

பி.எம்.சி தொழிலாளர்கள் தனது அலுவலகத்தின் சில பகுதிகளை இடிக்கும் படங்களை ட்வீட் செய்த கங்கனா, “பாகிஸ்தான், ஜனநாயகத்தின் மரணம்.” என இதை வர்ணித்துள்ளார்.

“நான் ஒருபோதும் தவறிழைக்கல்லை. என் எதிரிகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள், இதனால்தான் எனது மும்பை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக உள்ளது” என்று ரனவத் மற்றொரு ட்வீட்டில் கூறினார். அவரது முந்தைய ட்வீட், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீருடன் ஒப்பிட்டுப் பார்த்தது, சிவசேனா தலைவர்களின், குறிப்பாக சஞ்சய் ரவுத்தின் கோபத்தை ஈர்த்தது.

கங்கனா ரனவத் மேலும், “எனது வீட்டில் சட்டவிரோத கட்டுமானம் எதுவும் இல்லை. செப்டம்பர் 30’ஆம் தேதி வரை கொரோனா காரணமாக எந்த இடிப்பையும் அரசாங்கம் தடை செய்துள்ளது. இதுதான் பாசிசம் போல் தோன்றுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

இன்று முன்னதாக தொடர்ச்சியான ட்வீட்டுகளில், ரனவத் பாந்த்ரா வெஸ்டில் உள்ள பாலி ஹில்லில் உள்ள தனது ‘மணிகர்னிகா பிலிம்ஸ்’ அலுவலகத்தை ‘ராம் கோயில்’ என்றும், பி.எம்.சி யை ‘பாபர்’ என்றும் ஒப்பிட்டார். சிவசேனாவுடனான சண்டையின் காரணமாக, தான் மகாராஷ்டிரா அரசாங்கத்தால் குறிவைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இடிப்பு பணிகள் இன்றே நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

Views: - 6

0

0