குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்கும் 18 எதிர்க்கட்சிகள்..! பட்ஜெட் கூட்டத்தொடரை முடக்கும் முனைப்பில் எதிர்க்கட்சிகள்..?

29 January 2021, 10:40 am
President_Ramnath_Govind_UpdateNews360
Quick Share

பாராளுமன்றத்தின் முக்கியமான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், ஆரம்பத்திலேயே எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு நிலைப்பாட்டை எடுத்து பரப்பரப்பைக் கூட்டியுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடர், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் குழு, இரு அவைகளிலும் உள்ள பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் பாஜக மற்றும் காங்கிரஸின் தேசியத் தலைவர்கள் உட்பட 144 எம்.பி.க்கள் மத்திய மண்டபத்தில் அமரவுள்ளனர். மீதமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து, சமூக இடைவெளியுடன் மக்களவை மற்றும் மாநிலங்களவை அறைகளில் அமர்ந்திருப்பார்கள்.

இதற்கிடையே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கூட்டத்தொடரை சீராக நடத்துவதை உறுதி செய்ய அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற அரசாங்கம் நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு மேலவையில் அனைத்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தையும் அழைத்துள்ளார்.

இதற்கிடையில், பட்ஜெட் அமர்வு கடுமையான காட்சிகளைக் காண வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிப்பதாக அறிவித்தன. 
விவசாயிகள் எதிர்ப்பு, மந்தநிலை, வேலை இழப்புகள், கொரோனா நெருக்கடியைக் கையாளுதல் மற்றும் சீனாவுடனான எல்லை நிலைப்பாடு போன்ற பிரச்சினைகளில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்க ஒரு திட்டத்தை எதிர்க்கட்சிகள் தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ஆர்எஸ்பி , மக்கள் ஜனநாயகக் கட்சி, எம்.டி.எம்.கே, கேரள காங்கிரஸ் (எம்) மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிப்பதாக கூட்டாக அறிவித்துள்ளன.

இதே போல் ஷிரோமணி அகாலிதளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் தனித்தனியாக உரையை புறக்கணிக்கும் முடிவை அறிவித்தன. நாடாளுமன்றத்தில் 20’க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவரின் உரையைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை மத்திய நிதியமைச்சரால் இன்று வெளியிடப்படும். பின்னர் மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1’ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பிப்பார். பட்ஜெட் விளக்கக்காட்சிக்குப் பின்னர் ஜனாதிபதியின் உரையிற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து இரு அவைகளும் விவாதிக்கும்.

இந்த அமர்வு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 15 வரை மற்றும் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டு பகுதிகளாக நடைபெறும், மொத்தம் 33 அமர்வுகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0